‘அழிப்போம்! அல்லது கைப்பற்றுவோம்!’ ஈரானுக்கு அமெரிக்கா கடைசி வார்னிங்!

உலகமே ஒரு மிகப்பெரிய அணுஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம், இப்போது ‘யுரேனியம்’ விவகாரத்தால் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நாட்டு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பிறப்பித்துள்ள ஒரு அதிரடி உத்தரவு, உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. “ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது” என்பதுதான் மொஜ்தபா கமேனியின் அந்தத் திட்டவட்டமான கட்டளை.

அணுஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான இந்த யுரேனியத்தை வெளியேற்றினால், ஈரானின் பாதுகாப்பு பலவீனமடைந்துவிடும் என்றும், அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் ஈரான் அஞ்சுகிறது. ஆனால், இதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பாணியிலேயே மிகக்கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “யுரேனியம் ஈரானிடம் இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதைக் கைப்பற்றுவோம், தேவைப்பட்டால் அழிப்போம்” என்று ட்ரம்ப் முழங்கியுள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் மிக முக்கியமான ‘ஹார்முஸ் நீரிணை’ இப்போது அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் அணுஆயுதங்களைத் தயாரிக்க முயன்றால் ‘மிக மோசமான விளைவுகளை’ சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். “ஈரானிடம் இருந்து யுரேனியம் முழுமையாக அகற்றப்படும் வரை இந்தப் போர் ஓயாது” என்பதுதான் இஸ்ரேலின் ஒரே நிபந்தனை.

பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் சமரசம் பேச முயன்றாலும், அமெரிக்காவின் இந்த போர் நிறுத்த முயற்சிகள் ஒரு ‘தந்திரமான ஏமாற்று வேலை’ என்று ஈரான் கருதுகிறது. அமெரிக்கா மீண்டும் ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

“சரியான பதில்கள் வராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என ட்ரம்ப் ஒரு சில நாட்களே கெடு விதித்துள்ள நிலையில், ஈரான் தனது பிடிவாதத்தை விடுமா? அல்லது மத்திய கிழக்கு நாடுகள் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர்க்களமாக மாறுமா? உலகமே இப்போது ட்ரம்ப்பின் அடுத்த நகர்வை எதிர்நோக்கி நடுக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News