‘ஆண்ட்ராய்டு டிவி’ வைத்திருப்பவர்களுக்கு பேரிடி? கூகுள் நிறுவனம் வெளியிட்ட ‘விபரீத’ எச்சரிக்கை?

உங்கள் வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் ஆண்ட்ராய்டு டிவி அல்லது செட்-டாப் பாக்ஸ், வெறும் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் மட்டும் ஒளிபரப்பவில்லை; உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை உளவு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உலக அளவில் சுமார் பதின்மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஆண்ட்ராய்டு சாதனங்களில் அதிபயங்கர உளவு மால்வேர் புகுத்தப்பட்டிருப்பதை கூகுள் நிறுவனம் தற்போது கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘வீடியோஸ்ட்ராங்’ (Videostrong) என்ற நிறுவனம், சாதனங்களைத் தயாரிக்கும்போதே தொழிற்சாலையிலேயே இந்த ரகசிய வைரஸை உள்ளே புகுத்தி விற்பனைக்கு அனுப்பியிருப்பது தொழில்நுட்ப உலகையே உலுக்கியுள்ளது.

‘எக்ஸ்.சி.பி.இ’ (XCPE) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நச்சு மென்பொருள், நீங்கள் கடைகளில் புதிதாக வாங்கி வந்து டிவியை ஆன் செய்யும் முதல் நொடியிலிருந்தே தனது வேலையைத் தொடங்கிவிடும். பயனர்களின் அனுமதி இல்லாமலேயே சாதனத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கையில் எடுக்கும் இந்த மால்வேர், ரகசியமாகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது, டிவி திரையைப் படம் பிடிப்பது மற்றும் உங்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்களைத் திருடுவது போன்ற வேலைகளைச் சத்தமில்லாமல் செய்து வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வீட்டு வைஃபை மற்றும் இன்டர்நெட் இணைப்பைச் சைபர் கிரிமினல்கள் தங்களின் சட்டவிரோத இணையப் பரிவர்த்தனைகளுக்கும், விளம்பர மோசடிகளுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்திப் பணம் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்கள் மட்டுமின்றி, மருத்துவச் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் என இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் ஊடுருவியுள்ளது. இந்தச் சதியை முறியடிக்க ஜப்பான் தேசிய காவல்துறை மற்றும் சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்த கூகுள், சைபர் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டு மையங்களைத் தகர்த்து, சுமார் ஒரு கோடி சாதனங்களுக்கான தொடர்பைத் துண்டித்துள்ளது. அத்துடன், விதிகளை மீறிச் செயல்பட்ட அந்தச் சீன நிறுவனத்திற்கு நிரந்தரத் தடை விதித்து, இனி அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு சாதனங்களைத் தயாரிக்க முடியாதபடி கூகுள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாம் இணையத்தில் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஒரு சாதனத்தை வாங்குவதற்கு முன்பே அதனுள் வைரஸ் புகுத்தப்பட்டு வருவது சாமானிய மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகப் பெயர் தெரியாத நிறுவனங்களின் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்களை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, நம்பகமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துமாறு கூகுள் நிறுவனம் பொதுமக்களுக்குத் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

Latest News