தமிழகத்திற்கு மாபெரும் துரோகம்! புல்லட் ரயில் திட்டத்தில் ஆந்திராவுக்கு ‘ஜாக்பாட்’?

தென்னிந்தியாவின் பொருளாதார வல்லரசுகளாகத் திகழும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் பிரம்மாண்ட புல்லட் ரயில் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதன் வழித்தட வரைபடம் சமூக வலைதளங்களில் மாபெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் இந்தத் திட்டம், உண்மையிலேயே தென்னிந்தியாவிற்கான புல்லட் ரயிலா அல்லது ஆந்திர மாநிலத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டமா என்றக் கேள்வியை மற்ற மாநில மக்கள் ஆவேசமாக எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கையில் இருக்கும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுதான். மைசூருவில் தொடங்கி பெங்களூரு வழியாக சென்னை வரும் வழித்தடத்தில், தமிழகத்திற்கு அரக்கோணம், பூந்தமல்லி மற்றும் சென்னை ஆகிய மூன்றே மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

அதிலும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் அந்த நிறுத்தமும் நீக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சென்னை முதல் ஹைதராபாத் வரையிலான பாதையிலும், பெங்களூரு முதல் ஹைதராபாத் வரையிலான பாதையிலும் ஸ்ரீ சிட்டி, நெல்லூர், ஓங்கோல், குண்டூர், அமராவதி, அனந்தபூர், குர்னூல் என ஆந்திராவின் சிறிய நகரங்கள் கூட விடாமல் இணைக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதான பாதையிலேயே இல்லாத திருப்பதியை ஒரு முக்கோண வழித்தடம் அமைத்து இந்தத் திட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தொழில் வளர்ச்சி அவற்றின் தலைநகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் என்பது ஓசூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை எனப் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியைக் கொண்ட மாநிலமாகும்.

ஆனால், தமிழகத்தில் சென்னையைத் தாண்டி வேறு எந்தவொரு முக்கிய நகரத்திற்கும் இந்த புல்லட் ரயில் நீட்டிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் திருப்பதியை இணைத்தது போல, தமிழகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் திருவண்ணாமலையையோ அல்லது புதுச்சேரியையோ ஏன் இணைக்கவில்லை என்ற நியாயமான கேள்விகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே தமிழகத்தின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஆந்திரா கடுமையான போட்டியைக் கொடுத்து வரும் சூழலில், இந்த புல்லட் ரயில் கட்டமைப்பு முழுக்க முழுக்க ஆந்திராவிற்கே சாதகமாக அமைந்திருப்பது தமிழக மக்களிடையே கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு தனது அரசியல் அழுத்தத்தால் ஆந்திராவிற்கு இத்தனை சலுகைகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசும் உடனடியாகக் குரல் கொடுத்து நம் மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News