டிரம்பிற்கு பேரிடியை கொடுத்த ‘ஜே.டி.வான்ஸ்’! உருவாகும் புதிய ‘வலதுசாரி’ கூட்டணி?

அமெரிக்க இடைத்தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி சந்தித்த வரலாறு காணாத படுதோல்வி, இப்போது வெள்ளை மாளிகைக்குள்ளேயே ஒரு மாபெரும் அரசியல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபர் டிரம்பின் நிழலாகவே வலம் வந்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தேர்தல் தோல்விக்குப் பிறகு திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, டிரம்பின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வான்ஸ், “நாம் தேர்தலில் தோற்றதற்குக் காரணமே ஈரான் போர்தான் என்பதை அதிபரே ஒப்புக்கொண்டார்;

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு செனட் சபையை இழக்கும் அளவிற்கு இந்தப் போர் நமக்கு அவசியமானதா?” என்று மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருப்பது அமெரிக்க அரசியலை உலுக்கியுள்ளது.

வரும் 2028-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலைக் குறிவைத்து, டிரம்பின் போர் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள சொந்தக் கட்சி வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்க, ‘புதிய வலதுசாரி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்க வான்ஸ் திட்டமிட்டு வருவதாக ஃபாக்ஸ் நியூஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இழந்த வாக்காளர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர நான்கு முக்கிய நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார். அதன்படி, ஈரான் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவிற்கே முதல் முன்னுரிமை அளிப்பது மற்றும் குறிப்பாக இஸ்ரேலுடனான அமெரிக்காவின் உறவை மாற்றியமைப்பது ஆகிய நான்கு அதிரடித் திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளார்.

வெளிநாட்டுப் போர்களில் தலையிடாமல், எல்லைகளை மூடி உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பேன் என்று டிரம்ப் தொடக்கத்தில் கூறிய கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றதால், ஏமாற்றமடைந்த மக்களை ஒருங்கிணைப்பதே வான்ஸின் இந்தப் புதிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸைப் போல டிரம்பை விட்டு முற்றிலுமாகப் பிரிந்து செல்லாமல், அதேநேரம் டிரம்பின் வெளியுறவுக் கொள்கையை மட்டும் எதிர்த்துத் தனது அரசியல் எதிர்காலத்தை வான்ஸ் மிக சாதுரியமாகக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதில் தொடக்கத்திலிருந்தே வான்ஸிற்குப் பெரிய ஆர்வம் இல்லை என்பதை டிரம்பே முன்பு ஒப்புக்கொண்ட நிலையில், வெள்ளை மாளிகைக்குள் வெடித்துள்ள இந்தப் பனிப்போர் அமெரிக்காவின் அடுத்தகட்ட அரசியலை எந்தத் திசையில் கொண்டு செல்லப்போகிறது என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

Related News

Latest News