மொத்த உலகையும் உறைய வைத்த வடகொரியா! அடுத்தடுத்து பாய்ந்த கொடூர ‘கொத்து குண்டு’ ஏவுகணை!

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் அதிரவைக்கும் வகையில் வடகொரியா அதிபயங்கர ஸ்ட்ராடஜிக் க்ரூஸ் ஏவுகணை(Strategic Cruise Missile) சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தென் கொரிய எல்லையில் சமீபத்தில் நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் மூன்று தென் கொரிய வீரர்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே எல்லைப் பதற்றம் கொதிநிலையை அடைந்துள்ள சூழலில், கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரிய ராணுவம் இந்த அடுத்தடுத்த அதிரடி சோதனைகளை அரங்கேற்றியுள்ளது.

எதிரிகளின் இலக்குகளைக் குறிபார்த்து நொடிப்பொழுதில் சாம்பலாக்கும் அதிநவீன கொத்து குண்டு ஆயுதங்களை இந்த ஏவுகணையில் பொருத்தி வடகொரியா பரிசோதித்திருப்பது உலக நாடுகளைப் பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த க்ரூஸ் ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள நடுத்தர அளவிலான கொத்து குண்டுகள், சுமார் ஐந்து முதல் ஆறு ஹெக்டேர் பரப்பளவை ஒட்டுமொத்தமாகச் சுட்டெரித்து வெறும் சாம்பல் மேடாக மாற்றும் அதீத சக்தி கொண்டவை என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகம் எச்சரித்துள்ளது.

குறிப்பிட்ட நிலப்பரப்பின் புவியியல் அமைப்புகளுக்கு ஏற்ப பாதையை மாற்றி, வானில் இருந்து செங்குத்தாகப் பாய்ந்து எதிரிகளின் ராணுவ இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் நவீன தொழில்நுட்பம் இதில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஏவுகணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அச்சுறுத்தல்களை அடியோடு முறியடித்து, தங்களது தேசிய பாதுகாப்பை இரும்புக் கோட்டையாக மாற்றவே இத்தகைய அதிபயங்கர ஆயுதங்களை தாங்கள் தொடர்ந்து சோதித்து வருவதாகவும் அந்நாடு வெளிப்படையாகவே நியாயப்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், தற்கொலைப்படை ட்ரோன்கள் மற்றும் இலக்குகளைத் தாக்கும் நீர்மூழ்கி டார்பிடோக்கள் எனப் பலதரப்பட்ட நவீன ஆயுதங்களை வடகொரியா தொடர்ந்து களமிறக்கி வருகிறது.

வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலன்றி, க்ரூஸ் ஏவுகணை சோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நேரடித் தடைகள் இல்லாத ஓட்டையை வடகொரியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த ஏவுகணை ஏவுதல் தொடர்பாக தென் கொரிய ராணுவமும் அமெரிக்க கூட்டுப் படைகளும் தீவிர உளவுத் தகவல்களைச் சேகரித்து கள நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றன.

சர்வதேச அரசியல் சூழல் பதற்றமாக இருக்கும் இந்த வேளையில், எவருக்கும் அஞ்ச மாட்டோம் என்பதை உலகுக்கு மீண்டும் பறைசாற்றவே வடகொரியா இந்த ஏவுகணை பலப்பரீட்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

Related News

Latest News