சவுதி அரேபியாவில் என்ன நடக்கிறது? அமெரிக்கா விடுத்த அவசர எச்சரிக்கை! நடுங்கும் வளைகுடா!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் மிகத் தீவிரமாகச் சூழ்ந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் மிக அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியாவின் முக்கியமான சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அடுத்தடுத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும், இதனால் எந்த நேரத்திலும் அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கலாம் என்றும் அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

இந்த மோதல் மிகக் குறுகிய காலத்தில் எல்லைகளைத் தாண்டி பெரும் பிராந்தியப் போராக வெடிக்கக்கூடும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில் பன்னிரண்டு பேர் உயிரிழந்ததோடு, தம்மாம் விமான நிலையத் தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட இருவர் பலியான துயரச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.

இந்தத் தொடர் அச்சுறுத்தல்களின் எதிரொலியாக, அவசரமற்ற தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை உடனடியாக சவுதியை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசுப் பணியாளர்கள் எவரும் உரிய அனுமதியின்றி விமான நிலையங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், சாமானிய மக்கள் விமான நிலையங்களுக்குச் செல்லும்போது உச்சக்கட்ட கவனத்துடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, ரியாத் விமான நிலையம் உள்நாட்டுச் சேவைகளுக்கு மட்டுமே பகுதி அளவில் இயக்கப்பட்டு வரும் சூழலில், ஜித்தா மற்றும் தம்மாம் விமான நிலையங்களில் கடுமையான காலதாமதங்களும் விமான ரத்துகளும் நிலவி வருகின்றன.

இதற்கிடையில், வானில் இடைமறித்து அழிக்கப்படும் ஏவுகணைகள் அல்லது தாக்குதல் சார்ந்த காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பதோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதோ சவுதி சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அத்தகைய விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தூதரகம் தன் குடிமக்களை எச்சரித்துள்ளது.

எண்ணெய் வளமிக்க சவுதி மண்ணில் விமானப் போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அச்சுறுத்தல், வளைகுடா நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர் மக்களிடையே மிகுந்த பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News