முதல்வர் விஜய் எடுத்த இரும்புக்கரம்! தவெக தொண்டர்களுக்கு போட்ட அதிரடி தடை!

தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில், ஒரு பக்கம் நிர்வாக வேகம் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதே வேளையில் ஆளும் கட்சித் தொண்டர்களின் சில அதிரடி நடவடிக்கைகள் இப்போது முதலமைச்சர் விஜய்க்கே ஒரு மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்ட ஒரு “ரெய்டு” இப்போது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சம்பவம் என்னவென்றால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய நோயாளிக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தகவல் பரவியது. இதைக் கேட்ட தவெக மருத்துவ அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், நேரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்து அதிகாரிகளுடன் ஒரு ‘ரிவியூ மீட்டிங்’ நடத்தியுள்ளனர். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவ, அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கங்கள் கடும் கொதிப்படைந்துள்ளன. “அரசு நிர்வாகத்தில் அரசியல் கட்சியினர் தலையிடுவதா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியதோடு, போராட்ட அறிவிப்புகளையும் வெளியிடத் தொடங்கினர்.

இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்குச் சென்றதும், அவர் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்ததாகக் கூறப்படுகிறது. தனது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தச் செயலையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் இப்போது ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

“தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடக்கூடாது; குறிப்பாக மருத்துவமனை போன்ற பொதுச் சேவை இடங்களில் தன்னிச்சையாக ஆய்வு செய்யக் கூடாது” என்று அவர் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரப்பூர்வ உரிமை கொண்டவர்கள். சாதாரணக் கட்சித் தொண்டர்கள் தங்களின் எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், “இனிமேல் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காது; அரசு இயந்திரம் சுதந்திரமாகச் செயல்படுவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தனது கட்சித் தொண்டர்களுக்கு இரும்புக்கரம் கொண்டு ‘செக்’ வைத்துள்ள முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கை, நிர்வாகத்தில் அவர் காட்டும் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Related News

Latest News