தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தவுடன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கையெழுத்திட்ட முதல் மூன்று மிக முக்கியமான கோப்புகளில் ஒன்று “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கும் முதலமைச்சர் விஜய், இந்தப் படைக்குத் தலைமை தாங்க ஒரு மிகச்சரியான அதிகாரியைத் தேர்வு செய்திருக்கிறார். அவர்தான் ஐஜி பவானீஸ்வரி ஐபிஎஸ்.
யார் இந்த பவானீஸ்வரி? ஏன் இவரைத் தமிழகத்தின் மிக பவர்ஃபுல் பிரிவான ‘சிங்கப்பெண்’ படைக்குத் தலைமை அதிகாரியாக விஜய் நியமித்திருக்கிறார்? இதற்கான விடை அவருடைய 23 ஆண்டுகால நேர்மையான காவல் பணியில் ஒளிந்திருக்கிறது. ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளரின் மகளாகப் பிறந்து, தந்தையைப் போலவே தானும் காக்கி உடை அணிய வேண்டும் என்கிற கனவோடு 2002-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று தனது பயணத்தைத் தொடங்கினார் பவானீஸ்வரி.
முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக, மேற்கு மண்டலத்தின் முதல் பெண் ஐஜி என்ற சரித்திர சாதனையைப் படைத்தவர் இவர்தான். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 சவாலான மாவட்டங்களைக் கையாண்ட இவரது ஆளுமைத் திறன், காவல்துறை வட்டாரத்தில் இவருக்கு ஒரு ‘இரும்புப் பெண்மணி’ என்கிற பிம்பத்தை ஏற்படுத்தியது.
ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாக இருந்தபோது அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான வழக்குகளைக் கையாண்ட விதம், மற்றும் கொரோனா காலத்தில் ஒரு சிறப்பு அதிகாரியாகக் களத்தில் நின்று பணியாற்றியதற்காக ஜனாதிபதி விருதையும் வென்றுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்கும், கண்டிப்பும் இவரிடம் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களிடம் இவர் காட்டும் அன்புதான் இவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
தற்போது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், ஒரு எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 36 பேர் கொண்ட இந்தச் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமையப்போகிறது. திரையில் நாம் பார்த்த சிங்கப்பெண்களைத் தாண்டி, நிஜத்திலேயே ஒரு சிங்கப்பெண் இப்போது தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்குக் கவசமாக மாறியிருக்கிறார். பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையிலான இந்த அதிரடிப்படை, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
