கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.அப்போது, பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து மற்றும் அலுவலகத்துக்கு தீவைத்தனர்.
வன்முறைக்கு இடையே கிராம மக்கள் சிலர் வகுப்பறையில் இருந்த இருக்கைகள், ஏசி, கம்யூட்டர், மின் விசிறிகள், ஏர் கூலர் விடுதி சமையலறையில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அள்ளிச் சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் , பள்ளியில் இருந்து திருடிச் சென்ற பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைக்கும்படி, சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், கிராம உதவியாளர் கனியாமூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை தண்டோரா மூலம் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.