தாய்ப் பால் நகைகள்

289
Advertisement

தாய்ப் பால் நகைகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை பெற்றோருக்கு முழு புதிய உலகத்தை உருவாக்குகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு ஆனந்தமான தருணத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

இந்த உணர்வுகளை மனதில் வைத்துப் பெங்களூருவைச் சேர்ந்த நமீதா நவின் குழந்தையின் தொப்புள் கொடி, பால் பற்கள், முதலில் வெட்டப்பட்ட நகங்கள், தலைமுடி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தனித்துவமான தாய்ப் பால் நகைகள் மற்றும் பலவிதமான நினைவுப் பொருட்களைக் கொண்டுவந்துள்ளார்.

எம்எஸ்சி பயோடெக்னாலஜி பட்டதாரியான நமீதா தன் மகனைப் பெற்றெடுத்தபோது அந்த நினைவுகளைப் பாதுகாக்க விரும்பியுள்ளார். தாய்ப் பாலூட்டல் மற்றும் குழந்தைப் பருவத்தின் நினைவுகளையும் பாதுகாக்க விரும்பினார். அவரது யோசனை தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. MilkyTale நகைகளை அறிமுகப்படுத்தி தற்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார்.

இதுபற்றிக்கூறியுள்ள நமீதா, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நினைவுகளை நேசிப்பதற்காக முதலில் வெட்டிய நகங்களை காகிதம் அல்லது பெட்டியில் வைத்திருப்பார்கள். அது தொலைந்துபோக வாய்ப்புள்ளது. அவை ஒரு மோதிரமாக, பதக்கமாக, காது வளையங்களாக இருக்கும்போது அந்த நினைவுகள் என்றென்றும் அழகான முறையில் ரசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

2019 முதல் மில்கிடேல் நகைகளை பேஸ்புக் மூலம் விற்பனை செய்துவருகிறார் நமீதா நவின். தினமும் 50 பேராவது தாய்ப்பால் நகைகள் பற்றி விசாரிக்கிறார்களாம். இரண்டுபேர் நகை செய்வதற்கான ஆர்டர் கொடுக்கிறார்களாம்.

வாடிக்கையாளர் தரும் பாலை உலரவைத்துத் தூளாக்குகிறேன். அதிலுள்ள பாக்டீரியாக்களை அழிப்பதற்கான ரசாயனங்களை சேர்த்துப் பாதுகாத்து வாடிக்கையாளர் விரும்பும் அச்சுகளில் இட்டு ஆபரணங்களை செய்துதருகிறேன் என்று விவரிக்கிறார் நமீதா.

தாய்ப் பாசத்த மிஞ்ச உலகத்துல எந்தப் பாசமும் இல்ல…. அம்மான்னா அம்மாதான்…