மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பழமையான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மைக்கோகன் மாநிலத்தின் தென்கிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவில், 9.4 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், பீதிஅடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நில நடுக்கத்தால் நாட்டில் உள்ள பல்வேறு பழமையான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்சிகோ கடற்கரையின் சில பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.