அமெரிக்க அரசியலில் தற்போது ஒரு மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ள ஒரு ரகசிய டீசல் ஒப்பந்தம் தான் இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை ‘உக்ரைனுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்று வர்ணித்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், டிரம்ப்பை கடுமையாகச் சாடியுள்ளனர்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், டிரம்ப்பை விமர்சிப்பவர்களில் 6 பேர் அவரது சொந்தக் கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.
சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், உலகளாவிய எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசலை ரஷ்யா உடனடியாகச் சந்தைக்குக் கொண்டுவரும் என்றும் தெரிவித்தார்.
இதற்காக ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடைகளை டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. ஆனால், இந்த முடிவை குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 12 மூத்த செனட்டர்கள் கடுமையாக எதிர்த்து டிரம்ப்பிற்கு ஒரு கண்டன கடிதத்தை எழுதியுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் ரஷ்யாவிற்கு ஒரு மிகப்பெரிய பரிசு என்றும், இது உக்ரைன் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் போரினால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது உண்மைதான், ஆனால் ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதால் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
மாறாக, இந்த டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பணம், உக்ரைன் மீதான போரைத் தொடர புதினிற்கு ஒரு நிதி உதவியாகவே அமையும் என்பதே இவர்களின் பிரதான அச்சமாகும்.
குடியரசு கட்சியின் மூத்த தலைவரான மிட்ச் மெக்கானல் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் டிரம்பிற்கு எதிராகக் களமிறங்கியிருப்பது, வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். “நீங்கள் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று டிரம்ப் கூறியது ஏற்கனவே சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த ஒப்பந்தம் உக்ரைனின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவிற்குப் பதிலாக சீனா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதின் ஒரு சர்வாதிகாரி என்றும், அவர் டிரம்ப்பை ஒரு ஏமாளியாகப் பயன்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் இந்த உட்கட்சி மோதல், உக்ரைன் போரின் போக்கையே மாற்றக்கூடும் என்பதால் உலக நாடுகள் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
