ஒரே ஒரு ஓவியத்தின் விலை இவ்வளவு கோடியா? உலக சாதனை படைத்த வின்சென்ட் வான் கோவின் படைப்பு!

உலகப் புகழ்பெற்ற டச்சு ஓவியரான வின்சென்ட் வான் கோ வரைந்த நூற்று முப்பத்தாறு ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்று, சுமார் 190.4 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்குப் புதன்கிழமை ஏலம் போயுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1890-ஆம் ஆண்டு அவரால் வரையப்பட்ட ‘செஸ்ட்நட் ட்ரீஸ் இன் பிளாசம்'(Chestnut Trees in Blossom) எனப்படும் பூத்துக் குலுங்கும் கஷ்கொட்டை மரங்களின் ஓவியமே, இந்த ஆண்டின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கலைப்படைப்பு என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2022 நவம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில், வான் கோ 1888-ல் வரைந்த ‘ஆர்ச்சர்ட் வித் சைப்ரசஸ்’ என்ற ஓவியம் 117.2 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானதே அவரது ஓவியங்களில் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இப்போது சோத்பிஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பிரம்மாண்ட ஏலத்திற்குப் பின்னால், இரண்டாம் உலகப் போர் காலத்துத் துயரம் நிறைந்த ஒரு நீண்ட சட்டப் போராட்டமும் ஒளிந்துள்ளது.

கடந்த 1909-ஆம் ஆண்டு பாரிஸில் ஜெர்மனியின் பிரபல பதிப்பாளரான சாமுவேல் பிஷர் என்பவர் இந்த ஓவியத்தை வாங்கினார். ஆனால் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி ஆட்சியின்போது யூதக் குடும்பமான இவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, 1936-ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

பின்னர் 1975-ஆம் ஆண்டு முதல் பிளாக்யூயர் அரியேட்டா(Blaquier-Arrieta) என்ற குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஓவியத்தைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

அரசியல் நெருக்கடியால் விற்கப்பட்ட இந்த ஓவியத்தை இப்போது ஏலம் விடக் கூடாது எனவும், அன்றைய சந்தை மதிப்பிற்குத்தான் அது விற்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் பிஷர் குடும்பத்தின் வாரிசுகள் சார்பில் பெர்லின் வழக்கறிஞர் குன்னர் ஷ்னாபெல் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இதனால் ஏலம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஏலத்திற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை தற்போதைய உரிமையாளர்களுக்கும் பிஷர் மற்றும் ஹெட்விக் தம்பதியின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் இடையே சுமுகமான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாஜி காலத்தில் தங்கள் குடும்பம் அனுபவித்த துயரங்களை அங்கீகரித்து, நீதிக்காகப் போராடிய ஜிசெலா பெர்மன் பிஷரின் வரலாற்றிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தச் சமரசம் ஏற்பட்டுள்ளதாக வாரிசுகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News