திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு (75), உடல்நலக் குறைவால் இன்று (நவம்பர் 19) காலமானார்.
நீண்டகால சுவாசப் பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் 22-ம் தேதி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தனர். 70 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்குத் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
