தங்கம் வாங்குபவர்களுக்கு பேரிடி! நகைகளில் மிகப்பெரிய கலப்படம்..இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு?

இந்தியக் குடும்பங்களின் மிக முக்கியச் சேமிப்பாகவும், ஆபத்துக் கால நிதி ஆதாரமாகவும் இருக்கும் தங்க நகைகளில், சோதனை இயந்திரங்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய நவீன மோசடி ஒன்று நடந்து வருவது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வழக்கமாகத் தங்கத்துடன் செம்பு அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களைக் கலப்படம் செய்தால், அதைப் பரிசோதனை இயந்திரங்கள் மூலம் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

ஆனால், இப்போது விமானங்களின் ஜெட் என்ஜின்களில் அதிக வெப்பத்தைத் தாங்கப் பயன்படுத்தப்படும் ‘ரீனியம்’ என்ற உலோகத்தைத் தங்கத்துடன் கலந்து நூதன மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் பதின்மூன்றாயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில், வெறும் அறுநூறு ரூபாய் மட்டுமே விலை கொண்ட இந்த ரீனியம் உலோகத்தைத் தங்கத்திற்குப் பதிலாகக் கலக்கின்றனர்.

இந்த ரீனியம் உலோகமானது தங்கத்தை விட அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியது என்பதோடு, துத்தநாகத்தை விட மூன்று மடங்கு அதிக அடர்த்தி கொண்டது.

இதனால் நகையை நெருப்பில் உருக்கினால் கூட இந்த உலோகம் தனியாகப் பிரியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரீனியம் கலக்கப்பட்ட இருபது கேரட் நகையை ஹால்மார்க் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பும்போது, அங்கிருக்கும் ‘எக்ஸ்ஆர்எஃப்’ (XRF) பரிசோதனை இயந்திரம் கூட இதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருபத்திரண்டு கேரட் சுத்தமான தங்கம் என்றே சான்றிதழ் அளித்துவிடுகிறது.

பொதுவாக எக்ஸ்ஆர்எஃப் இயந்திரங்கள் நகையின் மீது எக்ஸ்-ரே கதிர்களைப் பாய்ச்சி, அது எதிரொலிக்கும் அளவை வைத்தே உலோகங்களைப் பிரித்துக் காட்டும்.

ஆனால் வேதியியல் அட்டவணையில் தங்கத்தின் அணு எண் 79 ஆகவும், ரீனியத்தின் அணு எண் 75 ஆகவும் மிக அருகருகே இருப்பதால், இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதிர்களையே எதிரொலிக்கின்றன.

மேலும் அந்த இயந்திரங்களில் ரீனியத்தைக் கண்டறியும் மென்பொருள் அப்டேட் செய்யப்படாததால், பல நகைக்கடை உரிமையாளர்களுக்கே இந்தக் கலப்படம் தெரிவதில்லை என்பதை ‘தைனிக் பாஸ்கர்’ ஊடகத்தின் ரகசிய ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

தற்போது இந்த மோசடி வெளியானதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள பரிசோதனை இயந்திரங்களில் புதிய மென்பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது.

அப்படி அப்டேட் செய்யப்பட்ட பிறகு, சாமானிய மக்கள் தங்களது வீட்டு பீரோவில் சேமித்து வைத்துள்ள பழைய நகைகளை விற்கவோ அல்லது மாற்றவோ சென்றால், அதில் ரீனியம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நகையின் மதிப்பு பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News