தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்க நகைகள் மக்களின் முக்கியமான சேமிப்பாகவும், அவசர காலத்தில் பணம் திரட்ட உதவும் ஆதாரமாகவும் இருந்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.1.25 லட்சத்தை எட்டியுள்ளது.
இதனால் முன்பு குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு தங்கம் நல்ல லாபத்தை வழங்கியுள்ளது.
மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக மக்கள் தங்க நகைகளை அடகு வைத்து வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.
எனினும், தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடந்த சில மாதங்களில் நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆனால், கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு கிராமுக்கு ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை மட்டுமே கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், கூட்டுறவு நிறுவனங்களும் நகைக்கடன் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
அதன்படி, நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை இந்த வாரம் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
