பெண்களுக்கு குட் நியூஸ்: “வெற்றிப் பயணம்”… முழு விவரம் இதோ…

தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, “வெற்றிப் பயணம்” என்ற பெயரில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

தற்போது மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் பேருந்துகளில் இந்த சலுகை இல்லை.

புதிய திட்டத்தின் முதல் கட்டமாக, மாநகரம் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளுடன் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய வசதியாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளிலும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை வரம்போ கிடையாது என்றும், இதர சேவைகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவிகள் கல்வி, பெண்கள் வேலை, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக எளிதாக பயணம் செய்ய முடியும்.

திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணிக்கலாம். “வெற்றிப் பயணம்” திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Related News

Latest News