ஆதவ் அர்ஜூனா பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் போதிய கழிவறை வசதிகள் இல்லாத நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி கட்டிடங்களின் பராமரிப்பு பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தாலும், பல ஆண்டுகளாக கட்டிடங்கள் முறையாக சீரமைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏவும் தங்கள் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, கட்டிடங்களின் உண்மை நிலை மற்றும் தேவையான நிதி குறித்த அறிக்கையை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளி, கல்லூரிகளை ஓராண்டுக்குள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையான தரத்திற்கு உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. கட்டிட பராமரிப்பு பணிகளில் எந்தவித ஊழலும் இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது.
கல்வி நிறுவன கட்டிடங்களின் நிலையை கண்டறியும் பணி தற்போது 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், முழுமையான ஆய்வுக்கு மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கட்டிடங்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வகையாக பிரிக்கப்படும். உடனடியாக பயன்படுத்த முடியாத கட்டிடங்களுக்கு சிவப்பு நிறமும், சீரமைப்பு தேவைப்படுவோருக்கு மஞ்சள் நிறமும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவையில்லாத கட்டிடங்களுக்கு பச்சை நிற ஸ்டிக்கரும் வழங்கப்படும் என்றார் அமைச்சர் ஆதவ்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன் , மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கையை முன்வைத்தார்.
