தமிழகத்தில் திருமணம் ஆகவிருக்கும் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழக அரசு தனது புதிய “அண்ணன் சீர்” திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியுடன், முதற்கட்டமாக 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் மரபில், ஒரு பெண்ணின் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் சீர் என்பது அன்பு, பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அந்த அண்ணனின் இடத்தில் இருந்து, புதிதாகத் திருமண வாழ்வில் நுழையும் பெண்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்ற உறுதியை அளிக்கும் வகையிலேயே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மணப்பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
இந்தத் திட்டத்தை முழுமையாக இணையதளம் வழியாகச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பிரத்யேக இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
பயனாளிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, அவர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, இந்த உதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கான 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை, வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி மூலம் தகுதியான நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
தங்க நாணயத்தின் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று உள்ள சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கும் இந்த “அண்ணன் சீர்” திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறும் நிலையில், இந்தத் திட்டம் லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களுக்கு ஒரு பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
