வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி வெளியாகியுள்ளது. இனிமேல் உங்கள் தனிப்பட்ட மொபைல் எண்ணை யாருக்கும் தெரிவிக்காமலேயே வாட்ஸ்அப்பில் உரையாடல்களை மேற்கொள்ள முடியும். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், தனது பாதுகாப்பு வசதிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ‘குளோபல் யூசர்நேம் ரிசர்வேஷன்’ (Global Username Reservation) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்கு எனத் தனித்துவமான ஒரு அடையாளப் பெயரை அல்லது யூசர்நேமை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த வசதி முழுமையாக அமலுக்கு வந்த பிறகு, நீங்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பேசும்போதோ அல்லது குழுக்களில் இணையும்போதோ உங்கள் போன் நம்பரைப் பகிர வேண்டிய அவசியம் இருக்காது; வெறும் யூசர்நேமை மட்டும் பகிர்ந்தால் போதுமானது. இது மூன்று பில்லியன் பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் தளத்தில் ஒரு மிகப்பெரிய அந்தரங்கப் பாதுகாப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய வசதியில் தேடுதல் தளம் (Public Directory) எதுவும் கிடையாது என்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அம்சம். அதாவது, உங்கள் துல்லியமான யூசர்நேமைத் தெரிந்தால் மட்டுமே மற்றவர்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும்; யாருக்கும் உங்கள் யூசர்நேம் பரிந்துரைக்கப்படாது.
அத்துடன் ‘யூசர்நேம் கீ’ (Username Key) என்ற கூடுதல் பாதுகாப்பு அடுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புதிய நபர் உங்களை முதன்முறையாகத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது, நீங்கள் அமைத்துள்ள ரகசியக் குறியீட்டை அல்லது கீ-யைப் பதிவிட்டால் மட்டுமே அவர்கள் உங்களைச் சென்றடைய முடியும். இந்த ரகசியக் குறியீட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பதால், தேவையற்ற நபர்களின் குறுக்கீடுகளை முற்றிலுமாகத் தவிர்க்க முடியும்.
இதேவேளையில் மற்றொரு பெருமிதமான தகவலாக, இந்தியாவைச் சேர்ந்த க்ரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் நிறுவனத்தின் அடுத்த உலகளாவிய தலைமைச் செயலதிகாரியாக (Global CEO) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும், மெட்டா நிறுவனம் க்ரெட் நிறுவனத்தில் சுமார் 8,550 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு இந்தியத் தொழிலதிபர் உலகளாவிய ஒரு மெகா செயலியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்திருப்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய அதிரடித் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய தலைமைத்துவத்துடன் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களின் அந்தரங்கத்திற்கு 100 சதவீத உத்தரவாதம் அளிக்கத் தயாராகி வருகிறது.
