அமெரிக்காவின் வல்லமைமிக்க அதிபர் பதவிக்கு இன்னும் கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சுமார் 91 ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரு முக்கியச் சட்டத்தை மாற்றி அமைத்துள்ள இந்தத் தீர்ப்பு, அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மிகப்பெரிய அரசியல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இனிமேல் அமெரிக்காவில் உள்ள தனி அதிகாரம் பெற்ற கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களை, அதிபர் தனது விருப்பப்படி எந்த நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கலாம் என்பதே அந்த அதிரடித் தீர்ப்பு. கூட்டாட்சி வர்த்தக ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ரெபேக்கா ஸ்லாட்டர், தன்னை அநியாயமாக நீக்கியதாகத் தொடர்ந்த வழக்கில், ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் உள்ள ஆறு பழமைவாத நீதிபதிகள் டிரம்பிற்குச் சாதகமாக இந்தத் முடிவை எடுத்துள்ளனர்.
அமெரிக்க அரசியலமைப்பின்படி அதிகாரப் பகிர்வு கொள்கைக்கு, பழைய நடைமுறைகள் முரணாக இருப்பதாகத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம், நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட பல முக்கிய அமைப்புகளின் தலைவர்களை நீக்கும் அதிகாரம் இப்போது அதிபரின் கைகளுக்கு வந்துள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள டொனால்டு டிரம்ப், “அதிபர் அதிகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட மிக முக்கியமான வரலாற்றுத் தீர்ப்பு இது; இந்தத் தருணத்தில் அதிபராக இருப்பது எனக்குப் பெருமை” எனத் தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இது ஒருபுறமிருக்க, இதே தீர்ப்பில் டிரம்பிற்கு ஒரு நுட்பமான தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை வழிநடத்தும் மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ நியமனங்களில் மட்டும் நீதிமன்றம் ஒரு விதிவிலக்கை அறிவித்துள்ளது. ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட பெடரல் ரிசர்வ் ஆளுநர் லிசா குக்கை உடனடியாக நீக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
லிசா குக் மீது டிரம்ப் நிர்வாகம் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்க மறுத்ததோடு, அவர் மீதான வழக்கு முடியும் வரை அவர் பதவியில் தொடரலாம் என 5-4 என்ற கணக்கில் தீர்ப்பளித்துள்ளது. பெடரல் ரிசர்வ் ஆளுநரை எந்தக் காரணமும் இன்றி நீக்க அனுமதித்தால், நாட்டின் பொருளாதாரத் தனித்தன்மை மற்றும் வட்டி விகித முடிவுகளில் அரசியல் தலையீடு அதிகரித்துவிடும் என நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம் பெடரல் ரிசர்வ் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரிக்க முயல்வதாகவும், வட்டி விகிதக் குறைப்பு போன்ற முடிவுகளில் தனது விருப்பத்தை திணிக்கவே லிசா குக்கை நீக்க முயல்வதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஏற்கனவே முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுடனும் டிரம்ப் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஒருபுறம் அதிபரின் நிர்வாக அதிகாரத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது; மறுபுறம் நாட்டின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு தடுப்புச் சுவரையும் எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் எதிர்கால நிர்வாகத்தில் இந்தத் தீர்ப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
