இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty), இனி அதன் பழைய வடிவத்தில் செயல்படாது என்று இந்தியா மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தும் வரை, நதி நீர் பகிர்வு தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் கிடையாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த இந்தியா, தற்போது ஒரு படி மேலே சென்று, ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்றால் அது புதிய மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின் கீழ் மட்டுமே நடக்கும் என்று பாகிஸ்தானுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா இப்போதைக்கு முழுமையாக வெளியேறவில்லை என்றாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக இருக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமை தங்களுக்கு உண்டு என்பதை இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடும் விரிசலைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், நீர் பகிர்வை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திப் பாகிஸ்தானைத் தலைவணங்க வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில், இந்தியாவின் இந்த நடவடிக்கையால் தங்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், பாகிஸ்தானில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு அந்த நாட்டின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு பிரச்சனைகளே காரணம் என்று இந்தியா சாடியுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் இன்னும் பாகிஸ்தான் மண்ணில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதையும், ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட நபர்கள் பொது மேடைகளில் தோன்றிப் பேசி வருவதையும் இந்தியா ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்தியாவின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், கிசன்கங்கா மற்றும் ரத்லே போன்ற இந்தியாவின் நீர்மின் திட்டங்களைத் தொழில்நுட்ப ரீதியாக முடக்கப் பாகிஸ்தான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உலக வங்கி மூலம் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் முழு உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றைப் பாகிஸ்தான் பயன்படுத்தினாலும், அதில் இந்தியா சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி உண்டு.
ஆனால், பாகிஸ்தான் இந்த விதிகளைத் தவறாகப் பயன்படுத்தி இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நிலைப்பாடு, பாகிஸ்தான் தனது பயங்கரவாதக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.
