தங்கத்தைக் கக்கும் ‘தங்க எரிமலை’! வருஷத்துக்கு ₹18.9 கோடி! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

இயற்கையின் அதிசயங்கள் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. அந்த வகையில், உலகிலேயே மிகவும் தெற்கே அண்டார்டிகாவின் உறைபனிக் கண்டத்தில் அமைந்துள்ள ‘மவுண்ட் எரெபஸ்’ (Mount Erebus) என்ற எரிமலை, சர்வதேச விஞ்ஞானிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது வெறும் நெருப்பைக் கக்கும் எரிமலை மட்டுமல்ல, காற்றில் சுத்தமான தங்கத்தைத் தூவும் ஒரு அதிசய மலையாகத் திகழ்கிறது.

ராஸ் தீவில் அமைந்துள்ள இந்தச் செயல்படும் எரிமலை, ஒவ்வொரு நாளும் வளிமண்டலத்தில் மிக நுண்ணிய சுத்தமான தங்கப் படிகங்களை வெளியேற்றுகிறது என்பதுதான் இப்போது உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஒரு சுவாரஸ்யமான செய்தியாகும்.

ஆராய்ச்சியாளர்களின் நீண்ட கால ஆய்வின்படி, இந்த மவுண்ட் எரெபஸ் எரிமலை நாளொன்றுக்குச் சுமார் 80 கிராம் எடையுள்ள நுண்ணிய தங்கப் படிகங்களைக் கக்குகிறது. இன்றைய உலகச் சந்தையில் தங்கத்தின் விலையைக் கணக்கிட்டுப் பார்த்தால், இந்த எரிமலை வெளியேற்றும் தங்கத்தின் மதிப்பு ஒரு நாளைக்குச் சுமார் 5 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயாகும்.

அதாவது, ஓராண்டிற்கு மட்டும் இந்த மலை சுமார் 18 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை எவ்விதத் தடையும் இன்றி காற்றில் பறக்க விடுகிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்ட எரிமலைகளிலேயே, இத்தகைய உயர்தரத் தங்கப் படிகங்களை நேரடியாக வெளியேற்றும் ஒரே எரிமலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தங்கம் சாதாரணத் தூசியாக இல்லாமல், மின்னும் படிகங்களாக இருப்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். எரிமலையின் லாவா குழம்பில் இருந்து வெளியேறும் வெப்பமான வாயுக்களுடன் சேர்ந்து, இந்தத் தங்கத் துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

சுமார் 60 மைக்ரோ மீட்டர் அளவே கொண்ட இந்த நுண்ணிய துகள்கள், அண்டார்டிகாவின் பலத்த காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, எரிமலையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவு வரை பயணம் செய்கின்றன. இறுதியில் இவை அண்டார்டிகாவின் வெண்மையான பனிப்பரப்பின் மீது படிகின்றன. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் இந்தத் துகள்களை ஆய்வு செய்தபோது, அவை மிகத் துல்லியமான வடிவம் கொண்ட தனிமத் தங்கப் படிகங்களாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எரிமலை வாயுக்களில் தங்கம் இருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல; இத்தாலி, ஹவாய் மற்றும் மெக்சிகோவில் உள்ள சில எரிமலைகளிலும் இத்தகைய துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மவுண்ட் எரெபஸ் மட்டுமே இத்தனை பெரிய அளவில் படிகங்களை உருவாக்குகிறது.

குளோரின் மற்றும் சல்பர் நிறைந்த வாயுக்கள் குளிர்வடையும் போது தங்கம் பிரிந்து படிகங்களாக மாறுகிறதா அல்லது லாவா குழம்பின் மேற்பரப்பிலேயே இவை மெதுவாக வளர்கிறதா என்ற விவாதம் விஞ்ஞானிகளிடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இத்தனை கோடி மதிப்புள்ள தங்கம் காற்றில் கலந்தாலும், அண்டார்டிகாவின் கடுமையான குளிரும், மனிதர்கள் எட்ட முடியாத நிலப்பரப்பும் இதனைச் சேகரிப்பதில் பெரும் சவாலாகவே உள்ளது. இன்றும் தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே இந்தத் “தங்க எரிமலை” உலகை வியக்க வைத்துள்ளது.

Related News

Latest News