ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் புதிய சிக்கல்!

தமிழகத்தில் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் திட்டத்தில், இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. மத்திய அரசு தற்போது ‘தேசிய உணவுப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் 2026’ என்ற புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், அந்தியோதயா அன்ன யோஜனா எனப்படும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரேஷன் பொருட்களின் அளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். குறிப்பாக, உறுப்பினர் எண்ணிக்கை வரம்பின்றி மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி, இனி ஒரு நபருக்கு 7 கிலோ என்ற அடிப்படையில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் மட்டுமே இருந்தாலும் அவர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஆனால், புதிய சட்டத்தின்படி இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு இனி மாதம் 14 கிலோ அரிசி மட்டுமே மத்திய அரசிடம் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தத் திருத்தம், மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், வட மாநிலங்களில் ஒரு குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து 35 கிலோ அரிசி கிடைக்கும். ஆனால், சிறிய குடும்பங்களைக் கொண்ட தமிழக ஏழைகளுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக அமையும்.

இந்தச் சட்டத் திருத்தத்திற்குத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் ஒரு தனிநபரின் மாத சராசரி உணவுத் தேவை சுமார் 9 கிலோ வரை இருக்கும் நிலையில், அதனை 7 கிலோவாகக் குறைப்பது ஏழை மக்களின் ஊட்டச்சத்தைப் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியைக் குறைப்பது என்பது நியாயமற்றது என்றும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இந்தியாவில் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவையற்றது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், இந்தச் சட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படவுள்ளது. 2016-ல் இத்திட்டத்தை அமல்படுத்தியபோது, ‘பயனாளிகள் பெற்று வரும் பொருட்களின் அளவு எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படாது’ எனத் தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவித்திருந்தது.

எனவே, மத்திய அரசு தனது ஒதுக்கீட்டைக் குறைத்தாலும், தமிழக அரசு தனது சொந்த நிதியில் அரிசியை விலைக்கு வாங்கி மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுக்குக் கூடுதல் சுமையாக மாறும். தற்போது இந்த வரைவு அறிக்கை பொதுமக்களின் கருத்துக்கேட்புக்காக விடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாக மாறுமா அல்லது இதில் திருத்தங்கள் செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News