தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் போர்க்களமாக மாறியிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக ஆகிய இரு தரப்புக்கும் இடையேயான மோதல், இப்போது தனிநபர் விமர்சனங்களாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தவெக-வின் அதிகாரப்பூர்வ ஐடி விங் வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதளப் பதிவு, தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
அந்தப் பதிவில், திமுகவின் முக்கியத் தலைவரான உதயநிதி ஸ்டாலினை ‘ஒப்பாரிநிதி’ என்றும், ‘உதவாநிதி’ என்றும் மிகக் கடுமையான நையாண்டி வார்த்தைகளால் தவெக சாடியுள்ளது. திமுக-வை ‘டீம்கா’ என்று குறிப்பிட்டுத் தவெக வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், மணமக்களை வாழ்த்துவதற்குப் பதிலாகத் தனது அரசியல் ஆதங்கங்களை மேடையிலேயே புலம்பியதாகத் தவெக குற்றம் சாட்டியுள்ளது. “திருமணம் நடக்கும் இடம் என்பது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மங்களகரமான இடம்; அங்கு போய் மணமக்களை வாழ்த்திவிட்டு ஓரளவுக்கு அரசியல் பேசினால் பரவாயில்லை.
அதை விடுத்து, ஒரேயடியாக ஒப்பாரியாக வைத்து கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?” என்று தவெக நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. ‘டீம்கா’ ஆட்சியில் இருந்தபோது, உதயநிதிக்கு அதாவது ‘உதவாநிதிக்கு’ படப்பட்டியல் போட்டு, பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன் சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்ததெல்லாம் இப்போது மறந்துவிட்டதோ என்றும் தவெக தனது பதிவில் விளாசியுள்ளது.
இதன் காரணமாகத்தான், இப்போது எதுக்கெடுத்தாலும் சினிமா சினிமா என்றும், ஷூட்டிங் ஷூட்டிங் என்றும் உதயநிதி ஒரே புலம்பலாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார் எனத் தவெக சாடியுள்ளது. “மிஸ்டர் ஒப்பாரிநிதி, ஐந்து வருஷமாகச் சினிமாவைச் சுருட்டி வைத்திருந்த அந்தச் சிவப்பு பூதம், இப்போது ஏதோ சித்தாந்தம் பேசுவது போலப் பேசினால் எங்களுக்குச் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது பாஸ்” என்று தவெக நையாண்டி செய்துள்ளது. இதுவரை தமிழக மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏன் குழந்தைகள் மீது கூட வன்மத்தைக் கொட்டிய நீங்கள், இப்போது சினிமா துறையின் மீதும் பாயத் தொடங்கியுள்ளது ஏன் எனத் தவெக ஐடி விங் காரசாரமாகக் கேட்டுள்ளது.
சிவப்பு பூதம் சிதைந்துவிட்டதா? அல்லது இனிமேல் சினிமாவைப் பார்த்துக் காசு பார்க்க வழி இல்லை என்ற வயித்தெரிச்சலா? என அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ள தவெக, “இங்கெல்லாம் உங்கள் பருப்பு வேகாது, பேசாமல் ஏதாவது வெளிநாட்டிற்குப் போய் ‘டீம்கா’ பிரான்ச் ஓப்பன் பண்ற பிசினஸைப் பாருங்கள்” எனத் தனது பதிவை அதிரடியாக முடித்துள்ளது. தவெக-வின் இந்தத் துணிச்சலான மற்றும் நேரடியான பதிலடி, தமிழக அரசியலில் ஒரு புதிய மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான இணையதளப் போர் இன்னும் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
