ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் அதன் உறுப்பினர்களுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பு, PF பணத்தை எடுக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் நேரடியாக பிஎஃப் தொகையை பெறும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது, நிறுவனத்தின் ஒப்புதல் பெறுவது போன்ற பல கட்ட செயல்முறைகள் இருந்தன. இதனால் அவசர தேவைகளுக்கு பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பல நேரங்களில் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் இந்த செயல்முறை வேகமாக்கப்பட்டுள்ளது. சில கோரிக்கைகள் 3 நாட்களுக்குள் தீர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த புதிய யுபிஐ மற்றும் ஏடிஎம் வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் இது நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த திட்டத்தின் படி, உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் எண், UAN, பான், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். OTP அடிப்படையிலான சரிபார்ப்பும் அவசியமாக இருக்கும். மேலும், PF தொகையில் சுமார் 75% வரை மட்டுமே உடனடி எடுப்பிற்கு அனுமதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏடிஎம் வசதிக்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட PF ATM கார்டு வழங்கப்படலாம் என்ற தகவலும் உள்ளது. இதன் மூலம் நேரடியாக ஏடிஎம்மில் பணம் எடுப்பது சாத்தியமாகும். இந்த புதிய மாற்றம் செயல்படுத்தப்பட்டால், அவசர மருத்துவ செலவுகள் மற்றும் உடனடி பணத் தேவைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
