திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். பின்னர், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனுடன், அதிமுகவைச் சேர்ந்த மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்ததால், தமிழகத்தில் தற்போது ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய “அப்பாவை காணோம்” என்ற கருத்துக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “மு.க. ஸ்டாலின் விரைவில் மீண்டும் சட்டமன்றத்திற்கு வருவார்” என்று கூறியிருந்தார். இதனால் ஸ்டாலின் இடைத்தேர்தலில் களமிறங்குவார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலினிடம், “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்ததும் தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இதனால், இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

Related News

Latest News