கேஸ் சிலிண்டருக்கு புதிய கட்டுப்பாடு! மத்திய அரசின் அதிரடி முடிவு?

இந்தியாவிலுள்ள ஏழை எளிய மக்களுக்காகவும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்காகவும் மத்திய அரசு ஒரு மிக முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு ஒரு கசப்பான செய்தி காத்திருக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயுவை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் மானியத்தில், மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவரை ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை வழங்கப்பட்டு வந்த மானிய வரம்பு, இனிமேல் வெறும் 4 சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விஷயம் என்னவென்றால், உஜ்வாலா திட்டத்தில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்குத் தற்போது ஒரு சிலிண்டர் 642 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண நுகர்வோர் 942 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலையில், உஜ்வாலா பயனாளிகளுக்கு மட்டும் 300 ரூபாய் மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

ஆனால், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இனி ஒரு நிதியாண்டில் நீங்கள் வாங்கும் முதல் நான்கு சிலிண்டர்களுக்கு மட்டும்தான் இந்த 300 ரூபாய் மானியம் கிடைக்கும். ஐந்தாவது சிலிண்டர் முதல் நீங்களும் சாதாரண நுகர்வோர் வாங்கும் அதே முழு விலையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் கூடுதல் சுமை உங்கள் தலையில் விழப்போகிறது.

சரி, ஏன் இந்தத் திடீர் கட்டுப்பாடு? இதற்கு அரசாங்கம் இரண்டு முக்கியக் காரணங்களை முன்வைக்கிறது. ஒன்று, ஒரு சராசரி உஜ்வாலா பயனாளி ஆண்டுக்குச் சுமார் 4 சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அந்தப் பயன்பாட்டிற்கு ஏற்ப மானிய வரம்பு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது மற்றும் மிக முக்கியமான காரணம், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம்தான்.

ர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தாறுமாறாக ஏறி வருவதால், ஒரு சிலிண்டரை விநியோகம் செய்ய அரசுக்கு இப்போது 1,600 ரூபாய்க்கும் மேல் செலவாகிறதாம். இந்த நிதிச்சுமையைச் சமாளிக்கவே மானியச் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் 12 சிலிண்டர்கள் என இருந்த இந்த மானிய வரம்பு, படிப்படியாகக் குறைந்து இப்போது 4-ல் வந்து நிற்கிறது. விறகு அடுப்புகளைத் தவிர்த்துப் புகையற்ற சமையலறையை உருவாக்கக் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில், மானியம் இவ்வளவு தூரம் குறைக்கப்பட்டிருப்பது ஏழை எளிய குடும்பங்களின் பட்ஜெட்டை நிச்சயம் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related News

Latest News