ரோஹித் கூட இனி வைபவ்தான் ஓப்பனிங்? அஜித் அகர்கருக்கு வந்த அதிரடி மெசேஜ்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில், வெறும் 15 வயதில் ‘தொடர் நாயகன்’ விருதை வென்று உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி குறித்து, தற்போது ஒரு மிக முக்கியமான விவாதம் கிளம்பியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஃபரோக் இன்ஜினியர், இந்தியத் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கருக்கு ஒரு அதிரடியான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

வரும் 2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் வைத்து, இப்போதே வைபவ் சூர்யவன்ஷியை ஒருநாள் போட்டி அணியில் சேர்க்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.

ஃபரூக் இன்ஜினியரின் கருத்துப்படி, இந்திய அணியின் தற்போதைய ஓப்பனிங் ஜோடியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டும். கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியைத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன் கூட்டணி என்பது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும். அப்படி வைபவ் ஓப்பனிங் இறங்கினால், தற்போது ஓப்பனராக இருக்கும் சுப்மன் கில்லை நான்காவது இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

சுப்மன் கில் ஒரு கிளாஸ் பேட்ஸ்மேன் என்பதால், அவர் நான்காவது இடத்தில் இறங்குவது இந்திய அணியின் மிடில் ஆர்டரை இன்னும் வலிமையாக்கும் என்பது ஃபரோக் இன்ஜினியரின் கணக்கு.

முதலாவதாக ரோஹித் மற்றும் வைபவ், மூன்றாவதாக விராட் கோலி, நான்காவதாக சுப்மன் கில் என இந்த வரிசை அமைந்தால், இந்திய அணியின் பேட்டிங் வரிசையை யாராலும் அசைக்க முடியாது என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி பந்துகளை எதிர்கொள்ளும் விதம், ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸை நினைவுபடுத்துவதாகவும், அவர் ஒரு பிறவி மேதை என்றும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வைபவ்-விற்கு அதிகப்படியான பயிற்சிகளை வழங்கி அவரது இயல்பான ஆட்டத்தைக் கெடுக்க வேண்டாம் என்றும், அவரது தன்னம்பிக்கையை மட்டும் ஊக்கப்படுத்தினால் போதும் என்றும் அஜித் அகர்கரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜிம்பாப்வே தொடரில் 151 ரன்கள் குவித்து, இரண்டு அரைசதங்களுடன் அசத்திய வைபவ், ஒருநாள் போட்டிகளுக்கும் மிகச்சரியான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

15 வயது சிறுவனுக்காக இந்திய அணியின் டாப் ஆர்டரில் இத்தகைய அதிரடி மாற்றங்கள் செய்யப்படுமா? அஜித் அகர்கரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News