‘இது இனி எங்களோடது!’ அமெரிக்காவிடம் ஆயுதம் இல்லை? ஈரானை நடுங்க வைத்த டிரம்ப்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள் காலியாகி வருவதாக வெளியான தகவல்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“எங்களிடம் உலகிலேயே அதிகப்படியான ஆயுதங்கள் உள்ளன, சொல்லப்போனால் தேவையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகவே வைத்திருக்கிறோம்” என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ பலம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் அனைத்தும் தேவையற்றவை என்றும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ ரீதியான பதிலடி ஒருபுறம் இருக்க, அதிபர் ட்ரம்ப் தற்போது ஈரானுக்கு எதிராக ஒரு ‘டிஜிட்டல்’ போரையும் தொடங்கியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட அதிரடியான புகைப்படங்களைப் பகிர்ந்து ஈரானை மிரள வைத்துள்ளார்.

அதில் ஈரானின் ஒரு மிகப்பெரிய எண்ணெய் கப்பல் வெடித்துச் சிதறுவது போன்ற படத்தைப் பகிர்ந்து, “இனி இன்ஜின்கள் கிடையாது” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு படத்தில், அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான ‘கார்க் தீவை’த் தாக்குவது போன்ற காட்சிகளைப் பகிர்ந்து, அமெரிக்கப் படைகளை “உலகின் பாதுகாவலர்கள்” என்று வர்ணித்துள்ளார்.

குறிப்பாக, ஈரானின் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கக் கொடியுடன் ட்ரம்ப் நிற்பது போன்ற ஏஐ புகைப்படங்களை வெளியிட்டு, “இது இனி எங்களுடைய எண்ணெய் கப்பல்” என்று பதிவிட்டது சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது ஈரானுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்கமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கும் எண்ணெய் விநியோகத்தை முழுமையாகத் முடக்கப்போவதை ட்ரம்ப் இதன் மூலம் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய புகைப்படங்கள் மூலமாக ஈரானியத் தலைவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உளவியல் ரீதியான நெருக்கடியை ட்ரம்ப் ஏற்படுத்தி வருகிறார்.

இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் இது குறித்துக் கூறுகையில், ஈரானுடன் ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குச் சற்று அவகாசம் அளிக்கும் பொருட்டே அதிபர் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தத் திடீர் அமைதி, ஒரு மிகப்பெரிய புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியா அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா என்பதை வரும் நாட்கள் தெளிவுபடுத்தும். எது எப்படியிருந்தாலும், ட்ரம்பின் இந்த அதிரடி ஆட்டம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவது உறுதி.

Related News

Latest News