முதல்வர் விஜய்யின் ‘பவர் ரீசெட்’ அரசியல்! கோட்டையில் எழுதப்பட்ட புதிய வரலாறு!

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை இப்போது ஒரு புதிய அரசியல் இலக்கணத்திற்கு சாட்சியாக மாறியிருக்கிறது. மேடைப் பேச்சுகளில் மட்டுமே அதிகமாகக் கேட்டுப் பழகிப்போன ‘சமூக நீதி’ மற்றும் ‘அதிகாரப் பகிர்வு’ என்ற வார்த்தைகளை, தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்திலேயே செயலிலும் செய்து காட்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்.

மொத்தம் 33 பேர் கொண்ட இந்த அமைச்சரவையில், இன்று பதவியேற்ற 23 புதிய முகங்களின் பட்டியல் திராவிட அரசியலின் 60 ஆண்டுகால எழுதப்படாத விதிகளை சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது. இதில் முதலாவது அம்சம், விளிம்புநிலை மக்களுக்கான உண்மையான பிரதிநிதித்துவம். இன்று பதவியேற்றவர்களில் அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், அவிநாசி, ராசிபுரம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக, குறிப்பிட்ட சில துறைகளை மட்டுமே ஒதுக்கிவிட்டு சமூக நீதியைப் பேசி வந்த பழைய அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக, அதிகார மையத்தின் முக்கியப் பொறுப்புகளில் இவர்களை அமர வைத்து ஒரு மிகப்பெரிய உரிமை மீட்டெடுப்பை விஜய் நிகழ்த்தியுள்ளார்.

அடுத்ததாக, 1952-க்குப் பிறகு தமிழக வரலாற்றில் ஒரு உண்மையான ‘கூட்டணி ஆட்சி’ விஜய்யின் ராஜதந்திரத்தால் அரங்கேறியுள்ளது. 1967-ல் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அல்லது அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரக்கூடாது என்பதில் இரு கட்சிகளுமே மிகத் தீவிரமாக இருந்தன. குறிப்பாக 2006-ல் தனிப் பெரும்பான்மை இல்லாத போதும், காங்கிரஸை வெளியில் இருந்தே ஆதரவு தர வைத்தது கலைஞர் கருணாநிதியின் சாணக்கியத்தனம். ஆனால், அந்த அதிகாரக் குவியலைத் தகர்த்துள்ள விஜய், தமக்குக் கை கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை இடங்களை வழங்கி, இந்திய அரசியலுக்கே ஒரு புதிய பாடத்தைக் கற்பித்திருக்கிறார்.

“எங்களுக்கு அதிகார ஆசை இல்லை, எங்களை நம்பி வந்தவர்களை அரவணைத்துச் செல்வோம்” என்ற இந்த முதிர்ச்சியான முடிவு, வரும் காலங்களில் தேசியக் கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும் தவெக கூட்டணியை நோக்கி நகர ஒரு மாபெரும் வாசலைத் திறந்து வைத்துள்ளது. இது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, தமிழக அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படை இலக்கணத்தையே மாற்றி எழுதியுள்ள ஒரு புரட்சிகரமான நகர்வு. வார்த்தைகளில் அல்லாமல் செயலில் சமூக நீதியைக் காட்டியுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’, வரும் நாட்களில் இந்திய அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News