அம்பானி வீட்டில் வேலை கிடைப்பது இவ்வளவு கடினமா? என்ன தகுதிகள் வேண்டும்?

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மும்பையில் உள்ள ‘ஆண்டிலியா’ இல்லத்தில் வேலை பெறுவது மிகவும் கடினமான செயல்முறையாகக் கருதப்படுகிறது.

பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, அங்கு பணியில் சேர்வதற்கு உயர்ந்த தகுதிகள், தொழில்முறை அனுபவம் மற்றும் பலகட்ட தேர்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும்.

குறிப்பாக, பணியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட வசதிகளுடன், பணியின் தன்மைக்கு ஏற்ப பல லட்சம் ரூபாய் வரை சம்பளமும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அம்பானி இல்லத்தில் செஃப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது கலினரி ஆர்ட்ஸ் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றிய அனுபவம், இந்திய மற்றும் சர்வதேச உணவு வகைகளைத் தயாரிக்கும் திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிகள் குறித்த அறிவு ஆகியவை அவசியமாகக் கருதப்படுகின்றன.

ஆரம்ப நிலை செஃப்புகளுக்கு மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும், அனுபவம் வாய்ந்த எக்ஸிகியூட்டிவ் செஃப்புகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பளம் கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையல் திறமை மட்டுமல்லாமல், உணவை அழகாக பரிமாறும் திறன், அழுத்தமான சூழலிலும் அமைதியாகப் பணியாற்றும் திறன், பல வேலைகளை ஒரே நேரத்தில் துல்லியமாக மேற்கொள்ளும் திறன் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருப்பதும் முக்கியத் தகுதியாகும். சமையல்காரர், மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட எந்தப் பணிக்காக இருந்தாலும், அதற்கான கல்வித் தகுதி அல்லது தொழில்முறை சான்றிதழ் கட்டாயம்.

விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி, குடும்ப விவரங்கள், முந்தைய பணியிடங்கள் மற்றும் நற்பெயர் குறித்து விரிவான பின்னணி ஆய்வு நடத்தப்படும்.

மேலும், அம்பானி குடும்பத்தின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை வெளிப்படுத்த மாட்டோம் என்ற ரகசிய ஒப்பந்தத்திலும் பணியாளர்கள் கையெழுத்திட வேண்டும்.

பணியாளர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, நம்பகமான மனிதவள நிறுவனங்கள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஓட்டுநர்களுக்கு தனித்திறன் சோதனைகள், செஃப்புகளுக்கு சமையல் திறன் மதிப்பீடுகள் நடத்தப்படுகின்றன. இறுதிக்கட்டமாக முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நல்ல உடல்நலமும் தகுதியும் கொண்டவர்களே பணியில் சேர்க்கப்படுவார்கள்.

Related News

Latest News