தங்கம் வச்சுருக்கீங்களா..? இது இல்லைன்னா மொத்தமும் காலி! ஐடி புது ரூல்ஸ் தெரியுமா?

உங்க வீட்ல கணக்கில் காட்டாத ரொக்கப் பணமோ அல்லது முறையான ஆவணம் இல்லாத தங்க நகைகளோ இருக்கா? அப்படியானால் இந்த வீடியோ உங்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. ஏனென்றால், வருமான வரித்துறையின் ரேடாரில் நீங்கள் சிக்கினால், உங்கள் சொத்தில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தை வரியாகவும் அபராதமாகவும் அரசுக்கே தாரைவார்த்து கொடுக்க வேண்டியிருக்கும். அது எப்படி என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக பட்ஜெட் என்றாலே வருமான வரி விலக்கு எவ்வளவு கிடைக்கும் என்றுதான் நாம் பார்ப்போம். 2026 பட்ஜெட்டில் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பெரிய நிம்மதிதான். ஆனால், மறுபுறம் கணக்கில் வராத கருப்புப் பணத்தை ஒடுக்க வருமான வரிச் சட்டத்தின் ‘பிரிவு 115BBE’ இப்போது மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் இருக்கும் பணத்திற்கு முறையான ஆதாரம் இல்லை என்றால், முதலில் அடிப்படை வரியாக 60 சதவீதம் விதிக்கப்படும். அதன் மேல் 25 சதவீத சர்சார்ஜ் வரி மற்றும் செஸ் வரிகள் என அனைத்தும் சேர்த்தால், வரி மட்டுமே 78 சதவீதத்தை எட்டிவிடும். இது ஒருபுறம் இருக்க, நீங்களாக முன்வந்து கணக்குக் காட்டாமல் வருமான வரித் துறை சோதனையின் போது இந்தப் பணம் பிடிபட்டால், கூடுதலாக 10 சதவீத அபராதம் விதிக்கப்படும். அதாவது மொத்தமாக 85.8 சதவீத வரிப்பாரம் உங்கள் தலையில் விழும்.

ஒரு உதாரணத்திற்குச் சொன்னால், உங்களிடம் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் பிடிபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் 85 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் வரியாகவே எடுத்துக் கொள்ளும். உங்கள் கையில் மிஞ்சுவது வெறும் 14 லட்சம் ரூபாய் மட்டுமே. கிட்டத்தட்ட கஷ்டப்பட்டு சேர்த்த மொத்தப் பணமும் காலி தான்.

இருந்தாலும், 2026 பட்ஜெட்டில் ஒரு சிறிய நிம்மதி அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்த பிறகும், நீங்கள் ‘அப்டேட்டட் ஐடிஆர்’ (Updated ITR) தாக்கல் செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த நேரத்தில் நீங்கள் முறையான ஆதாரங்களைச் சமர்ப்பித்துவிட்டால், இந்த 85 சதவீத அபராத வரியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நினைவிருக்கட்டும், இந்த அபராத வரியைச் செலுத்தும்போது உங்களின் தொழில் நஷ்டங்களையோ அல்லது வேறு எந்தச் செலவுகளையோ காட்டி வரியைக் குறைக்க முடியாது.

சட்டத்தை ஏமாற்ற நினைத்தால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். எனவே, உங்கள் வருமானம் மற்றும் நகைகளுக்கு முறையான கணக்குகளைப் பராமரிப்பதே புத்திசாலித்தனம்.

Related News

Latest News