அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு… உலக அரசியலில் மிகவும் நெருக்கமான இந்த இரண்டு தலைவர்களுக்கும் இடையே இப்போது ஒரு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீதான போரைத் தொடர்வதா அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுப்பதா என்பதில் இருவருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் அனல் பறக்கும் விவாதம் நடந்திருக்கிறது.
இந்த உரையாடலின் போது நெதன்யாகு எவ்வளவு ஆவேசமடைந்தார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் விவரிக்கும்போது, “பிபி-யின் தலைமுடி தீப்பற்றி எரிவது போல அவர் கொதிப்பில் இருந்தார்” என்று ஒரு ஆங்கிலப் பழமொழியைப் பயன்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ஈரானின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் முக்கியமான இடங்களை முழுமையாக அழிப்பதற்கு விமானத் தாக்குதல்களை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது நெதன்யாகுவின் பிடிவாதம். ஆனால், ட்ரம்ப்போ “கொஞ்சம் பொறுங்கள்… ஆயுதங்களை எடுப்பதற்கு முன்னால் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம்” என்று தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வர கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. வாஷிங்டன் மற்றும் ஈரான் இடையே ஒரு ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கையெழுத்தாகப் போகிறது என்றும், அதற்குப் பிறகு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசலாம் என்பதும் ட்ரம்ப்பின் திட்டம். இதற்காக ‘ஆபரேஷன் ஸ்லெட்ஜ்ஹாமர்’ (Operation Sledgehammer) எனப்படும் ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தைத் தற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
ஆனால், இந்தத் தாமதம் ஒரு மிகப்பெரிய தவறு என்றும், ஈரானுக்குக் கூடுதல் கால அவகாசம் கொடுப்பது ஆபத்து என்றும் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இது குறித்து நேரில் விவாதிக்க விரைவில் அவர் வாஷிங்டன் செல்லத் திட்டமிட்டுள்ளார். வெளியே பார்த்தால் இருவரும் முட்டிக்கொள்வது போலத் தெரிந்தாலும், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நெதன்யாகுவுக்கும் எனக்கும் நல்ல உறவு இருக்கிறது, நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அவர் செய்வார்” என்று ஒரு அதிரடி போடு போட்டிருக்கிறார்.
மறுபுறம், ஈரான் தனது 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அமெரிக்கா தனது ‘கடல்வழித் திருட்டு’ வேலைகளை நிறுத்த வேண்டும் என்றும், முடக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. உலகமே ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் வேளையில், ட்ரம்ப்பின் இந்த அமைதி முயற்சி வெற்றி பெறுமா அல்லது நெதன்யாகுவின் பிடிவாதத்தால் போர் மீண்டும் வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
