தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் அரியணையில் அமர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் தளபதி விஜய். 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இந்த வெற்றியோடு திருப்தி அடைந்துவிட விஜய் தயாராக இல்லை. அவரது கண்கள் இப்போது அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நோக்கியே இருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தவெக அலை வீசினாலும், ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் அக்கட்சியால் ஒரு தொகுதியைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை. குறிப்பாக விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுகவே அதிகம் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த எட்டு மாவட்டங்கள்தான் இப்போது முதலமைச்சர் விஜய்யின் மெயின் டார்கெட். இந்த மாவட்டங்களில் தவெக ஏன் தோல்வியைத் தழுவியது? மக்கள் செல்வாக்கு எங்கே குறைந்தது? என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் இப்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெறும் மாநில அதிகாரம் மட்டும் போதாது, உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றினால் மட்டுமே தவெக-வின் ஆட்சி அதிகாரம் அடித்தட்டு மக்கள் வரை முழுமையாகச் சென்றடையும் என்று முதல்வர் விஜய் நம்புகிறார். இதற்காகச் சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த அதே வேகத்தோடு உள்ளாட்சித் தேர்தலையும் உடனே நடத்தி முடிக்கத் தவெக அரசு திட்டமிட்டு வருகிறது.
பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், மதுக்கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் முந்தைய அரசுகளின் நல்ல திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்வது போன்ற தனது அரசின் சாதனைகள், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குப் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என்று முதல்வர் உறுதியாக நம்புகிறார்.
அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு இருப்பதும், திமுக தனது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருவதும் தவெக-விற்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆனாலும், வெறும் சினிமா முகத்தை மட்டும் நம்பி இருக்காமல், திமுக மற்றும் அதிமுக-வைப் போலக் கட்சி உள்கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருக்கிறார்.
கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் , இப்போது உள்ளூர் அமைப்புகளிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட வகுத்துள்ள இந்த வியூகம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
