கோட்டையில் மொத்தமாக மாறிய ரூல்ஸ்! முதல்வர் விஜய்யின் ‘பங்க்சுவாலிட்டி’!!

தமிழகத்தின் அரசியல் மையமான சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, இப்போது முன்னெப்போதும் இல்லாத ஒரு விறுவிறுப்பையும் ஒழுக்கத்தையும் சந்தித்து வருகிறது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசு நிர்வாகத்தில் புயல் வேக மாற்றங்களைச் செய்து வரும் வேளையில், இப்போது தலைமைச் செயலக ஊழியர்களின் ‘நேர மேலாண்மை’ குறித்த ஒரு அதிரடி உத்தரவு கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.

“முதலமைச்சரே தினமும் காலை 9:30 மணிக்கே அலுவலகத்திற்கு வந்து தனது பணிகளைத் தொடங்கும் போது, ஊழியர்கள் ஏன் 10 மணிக்கு மேல் தாமதமாக வருகிறார்கள்?” என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் விளைவாக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இனி காலை 10 மணிக்குத் துல்லியமாகத் தங்களது இருக்கையில் இருக்க வேண்டும் எனத் துறை வாரியாக மிகக் கடுமையான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு அலுவலகங்கள் காலை 10 மணிக்குத் தொடங்கினாலும், பல ஊழியர்கள் மெதுவாக வருவது வழக்கமாக இருந்தது. பயோமெட்ரிக் முறை அமலில் இருந்தாலும், பல நேரங்களில் ஊழியர்கள் வருகையில் தொய்வு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், புதிய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் இந்த நிலையை அப்படியே மாற்றியுள்ளது. அவர் வெறும் சொல்லோடு நின்றுவிடாமல், செயலில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தினமும் காலை 9:30 முதல் 9:50 மணிக்குள்ளாகவே தனது அறைக்கு வந்துவிடும் விஜய், உடனடியாகக் கோப்புப் பணிகளில் மூழ்கிவிடுகிறார். முதல்வரே இவ்வளவு சீக்கிரம் வரும்போது ஒட்டுமொத்த நிர்வாகமும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்ற நோக்கில், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்கள் மூலம் இந்த உத்தரவு இப்போது கீழ்மட்ட ஊழியர்கள் வரை கடத்தப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் இந்த நேரத் துல்லியம் ஒன்றும் தற்செயலானது அல்ல. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற அவரது பதவியேற்பு விழாவிற்கு அதிகாலை 8:48 மணிக்கே அவர் வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்தல் நடந்த நாட்களில் கூட, குறித்த நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே, அதாவது காலை 8:45 மணிக்கே அவர் பேரவைக்கு வந்து அமர்ந்துவிட்டார்.

திரைத்துறையில் தனது ‘பங்ச்சுவாலிட்டி’க்கு பெயர்பெற்ற விஜய், இப்போது அதே பாணியை அரசு நிர்வாகத்திலும் கொண்டு வந்துள்ளார். முதலமைச்சரின் இந்த அதிரடி வேகத்தைப் பார்த்த ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இப்போது செம அலார்ட் ஆகியுள்ளனர்.

தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கெடுபிடி காரணமாக, கடந்த சில நாட்களாகவே தலைமைச் செயலக வளாகமே காலை 9:45 மணிக்கே பரபரப்பாகக் காணப்படுகிறது. 10 மணிக்குப் பிறகு தாமதமாக வரும் ஊழியர்களிடம் இருந்து உடனடியாக விளக்கக் கடிதம் பெற அந்தந்தப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

“மக்களுக்கான அரசு, மக்களின் நேரத்தில் இயங்க வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விஜய், கோட்டை ஊழியர்களுக்குத் தனது செயல்பாடுகள் மூலம் ஒரு மறைமுகமான பாடத்தைக் கற்பித்துள்ளார். இந்த மாற்றமானது வெறும் வருகைப் பதிவேட்டில் மட்டுமல்லாமல், அரசுப் பணிகளின் வேகத்திலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய்யின் இந்த டிசிப்ளின் ஆட்டம், தமிழக அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வருவது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related News

Latest News