‘அமெரிக்கா தாக்கினால் ரத்த ஆறு ஓடும்!’ – கியூபா அதிரடி எச்சரிக்கை!

உலக அரசியலில் நீண்டகால எதிரிகளாகக் கருதப்படும் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான மோதல், இப்போது ஒரு மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தங்களைத் தாக்க முற்பட்டால் அது ஒரு மிகப்பெரிய “இரத்த ஆறாக” மாறும் என்றும், அதன் விளைவுகள் கணிக்க முடியாத அளவிற்குப் பேரழிவைத் தரும் என்றும் கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் (Miguel Díaz-Canel) மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கியூபாவின் முக்கிய உளவு அமைப்பு மற்றும் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் மீது அமெரிக்க நிதித்துறை புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் இப்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த மோதலுக்குப் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான காரணம் “போர் ட்ரோன்கள்”. கியூபா நாடு ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிநவீன ராணுவ ட்ரோன்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை அமெரிக்காவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள ராணுவத் தளம் அல்லது புளோரிடா மாகாணத்தின் மீது ஏவத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைப் கவிழ்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கியூபா அதிபர் இதனை மறுத்ததோடு, தங்கள் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா ஏற்கனவே கியூபா மீது ஒரு “பொருளாதாரப் போரை” தொடங்கியுள்ளது. கியூபாவின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் வெனிசுலாவிடமிருந்து வரும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதால், கியூபாவில் வரலாறு காணாத மின் தட்டுப்பாடு மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி கியூபாவை ராணுவ ரீதியாக முடக்க அமெரிக்கா முயல்வதாகக் கியூபா அரசு குற்றம் சாட்டுகிறது. 1960-களில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முயற்சியைக் கியூபா மக்கள் எப்படி முறியடித்தார்களோ, அதே போன்றதொரு உறுதியுடன் இப்போதும் தாங்கள் போரிடத் தயார் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான கியூபாவின் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான சூழலில், மெக்சிகோ போன்ற நாடுகள் கியூபாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், வாஷிங்டன் நிர்வாகம் தனது பிடியைத் தளர்த்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.

ஒருபுறம் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், மறுபுறம் கியூபா மீதான இந்த நேரடி மோதல் போக்கு மத்திய அமெரிக்கப் பிராந்தியத்தை ஒரு மிகப்பெரிய போர் மேகத்திற்குள் தள்ளியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள் கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது ஒரு மிகப்பெரிய சர்வதேச மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News