அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடல், அதன்பின் தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய், 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கும், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், ரூ.139.47 கோடி மதிப்பிலான 86 புதிய கட்டடங்களை திறந்து வைத்து, மருத்துவ உபகரணங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சி வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் வெளியாகியிருந்தாலும், தமிழக அரசு தனது வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, வந்தே மாதரம் பாடலை இடம்பெறச் செய்யாமல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை நடத்தி முடித்தது.
