அடுத்த 5 நாட்கள் வானிலை எப்படி? முழு விவரம்…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும். இருப்பினும், சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 16-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். தொடர்ந்து ஜூலை 17 முதல் 19-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் எனவும், மற்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என்பதால் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

மேலும், வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

Latest News