தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ளது. 2024–25 நிதியாண்டிற்கான EPF வட்டி 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2025–26 நிதியாண்டுக்கான ஆண்டு வட்டித்தொகை ஜூலை 15, 2026-க்குள் சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இதற்காக சுமார் 1.44 லட்சம் கோடி ரூபாய் வட்டித்தொகை செயலாக்கப்பட்டு, சுமார் 34 கோடி EPF கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
EPFO 3.0 திட்டத்தின் கீழ் புதிய ஸ்மார்ட் டிஜிட்டல் தளம் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களது PF இருப்பு, உறுப்பினர் விவரங்கள், க்ளெய்ம் நிலை, ஓய்வூதிய தகவல்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் எளிதாகப் பெறலாம். மேலும், பல்வேறு பிரிவுகளில் PF தொகையைப் பெறும்போது எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதையும் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முழுமையாக KYC சரிபார்ப்பு முடிக்கப்பட்ட கணக்குகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் க்ளெய்ம்கள் தானியங்கி (Auto Settlement) முறையில் செயல்படுத்தப்படும். இதற்கு முன் இருந்த 1 லட்சம் ரூபாய் வரம்பு தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கட்டண அமைப்பு மூலம் க்ளெய்ம்கள் விரைவாக செயல்படுத்தப்படுவதால், பணம் எடுக்கும் அதே நாளில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், EPFO 3.0 மூலம் UPI மற்றும் ATM வழியாகவும் PF தொகையைப் பெறும் வசதி அறிமுகமாக உள்ளது. இதற்காக UPI ஐடி, DigiLocker பதிவு மற்றும் OTP சரிபார்ப்பு அவசியம். UAN எண்ணுடன் ஆதார் இணைப்பு, வங்கி கணக்கு விவரங்கள், IFSC குறியீடு மற்றும் ஆதார், பான், EPFO பதிவுகளில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அத்தியாவசியத் தேவைகள், வீட்டுவசதி மற்றும் சிறப்புச் சூழல்கள் என மூன்று பிரிவுகளில் PF தொகையைப் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், EPS உறுப்பினர்கள் நாட்டின் எந்த EPFO அலுவலகத்திலும் சேவைகளைப் பெறவும், வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவும் முடியும். இந்த புதிய மாற்றங்கள் PF சேவைகளை வேகமாகவும், வெளிப்படையாகவும், பயனர்களுக்கு எளிதாகவும் மாற்றும் என EPFO தெரிவித்துள்ளது.
