தமிழக அரசியலில் முதல்வர் விஜய் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு, அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறைகளின் கீழ் இயங்கும் பல்வேறு வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர் பதவிகளுக்கு இனி எவ்வித அரசியல் பரிந்துரைகளும் ஏற்கப்பட மாட்டாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன்படி, அரசு வாரியங்களுக்குத் தலைவர்களை நியமிப்பதில் அமைச்சர்களோ அல்லது கூட்டணி கட்சிகளோ தங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைச் சிபாரிசு செய்யக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி (TNPSC), தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மாநில தகவல் ஆணையம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மகளிர் ஆணையம் மற்றும் ஆதிதிராவிடர் நல ஆணையம் எனப் பல முக்கிய அமைப்புகள் தமிழக அரசின் கீழ் இயங்கி வருகின்றன. வழக்கமாக இது போன்ற தலைவர் பதவிகளுக்கு ஆளுங்கட்சியினரோ அல்லது கூட்டணி கட்சிகளோ தங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வந்தது. முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலங்களில் பின்பற்றப்பட்ட இந்த அரசியல் தலையீட்டு கலாச்சாரத்திற்கு இப்போது முதல்வர் விஜய் முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த ஆணையங்கள் எவ்வளவு முக்கியமானது மற்றும் அவை எவ்வளவு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வருக்கு விரிவான விளக்கமளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நேர்மையும் தகுதியும் வாய்ந்த நபர்களை மட்டுமே இந்தப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். ஏற்கனவே முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களைப் பதவியிலிருந்து விலக உத்தரவிட்ட நிலையில், புதிய நியமனங்களுக்காகக் காத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் போன்ற கூட்டணி கட்சிகள் ஏற்கனவே சில பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு மூத்த அமைச்சர் மூலமாக இந்தப் பரிந்துரைகள் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் அதை அதிரடியாக நிராகரித்துள்ளார். “யாரும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம், தகுதியானவர்களைத் தேடி நியமிப்போம்” என்ற தெளிவான செய்தியை அவர் கூட்டணி தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார். எவ்வித அரசியல் லாபமும் இன்றி, திறமையானவர்களைக் கொண்டு அரசு இயந்திரத்தைச் சீரமைப்பதே முதல்வரின் நோக்கமாக உள்ளது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த நேர்மையான அணுகுமுறை அரசு அதிகாரிகள் மத்தியில் பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது. அதே சமயம், தங்களின் ஆதரவாளர்களுக்குப் பதவி வாங்கித் தரக் காத்திருந்த அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. விஜய்யின் இந்த அதிரடி மாற்றம் வரும் நாட்களில் தமிழக நிர்வாகத்தில் எந்த மாதிரியான நல்ல மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
