‘மகளிருக்கு மாதம் ரூ.2500!’ வேலையை தொடங்கிய CM விஜய்! வெளியான முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த கையோடு, குடும்பத் தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஒரு முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது தேர்தல் வாக்குறுதியான “மகளிருக்கு மாதம் 2500 ரூபாய்” வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களாகத் தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய குடும்ப அட்டை மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்துச் சேவைகளும் கடந்த மே 15 முதல் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இது புதிய அட்டைக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை குடும்ப அட்டை என்பது வெறும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான ஆவணம் மட்டுமல்ல, அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கான ஒரு அடிப்படை அடையாளமாகும். கடந்த 2023 முதல் 2024 ஜூலை வரை மட்டும் சுமார் 8 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், திருமணமான மகள்கள் தனியாகப் பிரிந்து செல்வது மற்றும் அரசின் நிதி உதவிகளைப் பெறுவது போன்ற காரணங்களால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் இந்த லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு விரைவாகச் ஸ்மார்ட் கார்டுகளை வழங்க முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது மட்டுமின்றி, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் பிழைகளைத் திருத்துதல் போன்ற பணிகளும் இனி தடையின்றி நடக்கும். குறிப்பாக, திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான 1000 ரூபாய் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், முதலமைச்சர் விஜய் தனது வாக்குறுதியில் இதனை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, தற்போது நிலுவையில் உள்ள புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட பிறகு, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும். அந்தப் பட்டியல் தயாரானதும், மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ரேஷன் கார்டு சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்து, புதிய கார்டுகள் வழங்கப்பட்டவுடன், இந்த நிதி உதவித் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் 2500 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

ஒரு பக்கம் டாஸ்மாக் மூடல் போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் முதலமைச்சர் விஜய், மறுபக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரேஷன் கார்டு மற்றும் மகளிர் உதவித் தொகை திட்டத்திலும் வேகம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News