முதல்வர் விஜய்யின் ‘பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்’ – கோட்டையில் நடப்பது என்ன?

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. நடிகராகப் பார்த்த விஜய் வேறு, தமிழகத்தின் முதலமைச்சராகக் கோட்டையில் அமர்ந்திருக்கும் ஜோசப் விஜய் வேறு என்பதை அவருடைய ஒவ்வொரு நகர்வும் நிரூபித்து வருகிறது.

குறிப்பாக, முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய்யின் நிர்வாக ஸ்டைலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், அவருடைய கட்சிக்காரர்களுக்கே ஒரு சிறிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

கட்சித் தலைவராக இருந்தவரை, எந்த ஒரு முக்கியமான விஷயமாக இருந்தாலும் ஜான், ஆதவ், ஆனந்த், அருண்ராஜ் போன்ற தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளுடன் ஆலோசித்துத்தான் முதல்வர் விஜய் முடிவெடுப்பார். ஆனால், இப்போது ஒரு தெளிவான கோட்டை அவர் கிழித்திருக்கிறார். அரசியல் விவகாரமா? கட்சி நிர்வாகிகளுடன் பேசுகிறார். அரசு நிர்வாகமா? அந்த இடத்திற்கு அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளையும், அரசுச் செயலாளர்களையும் மட்டுமே அவர் நாடுகிறார்.

கட்சி நிர்வாகிகள் சொல்லும் யோசனைகளை அவர் காது கொடுத்துக் கேட்டாலும், அதை அப்படியே அமல்படுத்தாமல், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கள நிலவரத்தின் அடிப்படையில் மட்டுமே இறுதி முடிவுகளை எடுக்கிறாராம் முதல்வர். அதுமட்டுமில்லாமல், தன்னுடைய அமைச்சரவையில் இருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ‘செக்’ வைத்திருக்கிறார் விஜய்.

அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள தவெக நிர்வாகிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், கோப்புகளை எப்படிக் கையாளுகிறார்கள், பொதுமக்களிடம் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கத் தனது தனிச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஊழியர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் ‘பெர்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்’ ஸ்டைலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்களின் செயல்பாடுகளில் எந்தவிதத் தொய்வோ அல்லது புகார்களோ வராத வண்ணம் இருக்கவே இந்த ரகசியக் கண்காணிப்பு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கட்சி வேறு, அரசு நிர்வாகம் வேறு என்பதைத் தனது அமைச்சர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உணர்த்தவே விஜய் இந்த புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் இது கட்சி நிர்வாகிகளுக்குச் சற்று மலைப்பை ஏற்படுத்தினாலும், முதிர்ச்சியான ஒரு நிர்வாகத்திற்கு இதுவே அழகானது என்று அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். அதிகார வர்க்கத்தின் அனுபவத்தையும், அமைச்சர்களின் உழைப்பையும் சரியாக ஒருங்கிணைத்து விஜய் முன்னெடுக்கும் இந்த ‘புதிய டிராபிக்’ தமிழக அரசியலில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி மாற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்!

Related News

Latest News