சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று முதல் வரும் 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் பருவமழை வரும் 26ஆம் தேதி வாக்கில் தொடங்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் பல இடங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதேபோல், வரும் 17ஆம் தேதி சிவகங்கை மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 19ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில், சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
