டிடிவி தலையில் இடி! ஒரே நாளில் சரிந்த ‘சாம்ராஜ்யம்! 30 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா?

தமிழக அரசியல் களம் தற்போது பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றியம், நகரம், ஊராட்சி எனப் பல அடுக்குகளில் இருந்த நிர்வாகிகள் ஒரே நேரத்தில் விலகியிருப்பது, டிடிவி தினகரனை நிலைகுலையச் செய்துள்ளது. அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் விரக்தியடைந்த தொண்டர்கள், இப்போது தலைமை மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்த அதிரடி விலகல்களுக்குப் பின்னால் பலமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியிடமிருந்து மீட்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்தோடு தொடங்கப்பட்ட கட்சி, கடைசியில் அதே எடப்பாடியுடன் கூட்டணி அமைத்ததை ஒரு தரப்பு நிர்வாகிகள் இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். திருச்சி மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் இது குறித்து வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மன்னார்குடியில் கஷ்டப்பட்டு ஜெயித்த ஒரே ஒரு எம்.எல்.ஏ-வான காமராஜும், சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகத் திரும்பியது டிடிவி தினகரனுக்குக் கிடைத்த மிகப்பெரிய ‘நோஸ் கட்’ ஆகப் பார்க்கப்படுகிறது. இதனால் தனது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.

தற்போது அதிமுக-வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி. சண்முகத்திற்கும் இடையே அதிகாரப் போர் மூண்டுள்ள நிலையில், அமமுக-விலும் இப்படி ஒரு சரிவு ஏற்பட்டிருப்பது அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனது சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போனது டிடிவி தினகரனுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும். ஒருபுறம் நிர்வாகிகள் கிளம்பிக் கொண்டிருக்க, மறுபுறம் ‘பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்ற குரல்கள் எஸ்பி வேலுமணி முகாமிலிருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதனால் டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார்? தனது கூடாரத்தைச் சரி செய்ய அவர் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் இந்த மாற்றங்களை மக்கள் ஆவலோடு கவனித்து வருகிறார்கள்.

Related News

Latest News