முதல்வர் விஜய் அமைச்சரவையில் ‘அதிமுக’ ? வேலுமணிக்கு அடித்த லக்கி பிரைஸ்!

தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இப்போது அமைச்சரவை விரிவாக்கத்தின் மீதுதான் திரும்பியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவு, இப்போது தமிழக அமைச்சரவையையே மாற்றியமைக்கும் அளவுக்கு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, இப்போது அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ளதுதான் அரசியல் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாபிக்.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் உயர்த்திய எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர், முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த ஆதரவு வெறும் வாய்மொழி ஆதரவாக மட்டும் இல்லாமல், அமைச்சரவையில் பங்குகொள்ளும் ஒரு ஒப்பந்தமாக மாறியிருப்பதாகத் தெரிகிறது.

இதனால்தான் கடந்த சில நாட்களாக நடைபெற வேண்டிய அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை இடங்களை ஒதுக்க விஜய் தரப்பு சம்மதித்துள்ள நிலையில், இப்போது வேலுமணி தரப்பிலிருந்து எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த புதிய அரசியல் கணக்கின்படி, அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா உள்ளிட்ட சீனியர் தலைவர்களின் பெயர்கள் அமைச்சரவைப் பட்டியலில் பலமாக அடிபடுகின்றன. அதுமட்டுமில்லாமல், பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் லீமா ரோஸ் அல்லது மரகதம் குமரவேல் ஆகியோருக்கும் அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்க, மறுபுறம் வேலுமணி தரப்போ “மாண்புமிகு” அமைச்சர்களாக உருவெடுக்கத் தயாராகி வருகின்றனர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்ததும், ஒரு கட்சியின் மற்றொரு தலைவரைப் போல வேலுமணிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது, அவர் பக்கம் இருக்கும் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது. “அதிமுகவில் பிளவு இல்லை” என்று அவர்கள் வெளியில் சொன்னாலும், திரைக்குப் பின்னால் நடக்கும் இந்த அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகள், எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.

இன்னும் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமா அல்லது ஒரு மாபெரும் கட்சியின் சரிவா என்பதை வரும் நாட்கள் நமக்குத் தெளிவுபடுத்தும்.

Related News

Latest News