மக்கள் சந்திப்புக்கு தயாராகும் முதலமைச்சர் விஜய்… எப்போ தெரியுமா?

தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற த.வெ.க. தலைவர் விஜய், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு கோரினார். அவர் சென்ற இடமெல்லாம் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது. எனினும் சில மாவட்டங்களில் போலீஸ் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் பிரசார கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மூன்று முறை திட்டமிடப்பட்ட பிரசாரம் நடைபெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையிலும் த.வெ.க. சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்து ஆட்சியை அமைத்தது. தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற விஜய், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக கட்சி தலைவராக மக்களை சந்தித்த விஜய், தற்போது முதலமைச்சராக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தேர்தல் பிரசாரத்தில் செல்ல முடியாத மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் விஜய் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் மாவட்ட வாரியாக பயண திட்டம் தயாரிக்கப்படும். அதோடு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News