தமிழக சட்டமன்றத்தில் இன்று ஒரு மிகப்பெரிய அரசியல் குழப்பம் அரங்கேறியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவு, இப்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்ற அதிகாரப் போட்டியாக உருவெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி ஒரு அணியாகவும் பிரிந்து நின்று, “நான்தான் சட்டமன்றத் தலைவர்” என்று தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர்.
தன்னிடம் தான் அதிக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக வேலுமணி வாதிட, கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தனக்கே அந்த அதிகாரம் உண்டு என்று எடப்பாடி பழனிசாமி மல்லுக்கட்டி வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பதே இப்போது தமிழக அரசியலில் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
சட்ட நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு கட்சியின் சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சியின் தலைமை மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மை ஆகிய இரண்டுமே மிக முக்கியமானவை. பொதுவாக, எம்.எல்.ஏ-க்கள் கூடி ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அந்தத் தீர்மானத்தைச் சபாநாயகருக்கு அனுப்புவார்கள். ஆனால், கட்சித் தலைமை ஒருவரையும், எம்.எல்.ஏ-க்கள் மற்றொருவரையும் பரிந்துரைக்கும்போது அது ஒரு சட்டப் போராட்டமாக மாறும்.
இது போன்ற நேரங்களில், உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்புகள், குறிப்பாக மகாராஷ்டிரா அரசியல் விவகாரத்தில் சொன்னது என்னவென்றால், “அசல் அரசியல் கட்சி” அல்லது கட்சியின் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பதாகும். அதாவது, வெறும் எம்.எல்.ஏ-க்கள் மட்டும் கூடித் தன்னிச்சையாக ஒரு தலைவரை நியமிக்க முடியாது; அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
இருப்பினும், இதில் ஒரு முக்கியமான விதிவிலக்கும் உள்ளது. ஒரு கட்சியின் மொத்த எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், அதாவது அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் 32 பேர் பிரிந்து சென்று “நாங்கள் தான் அசல் கட்சி” என்று உரிமை கோரினால் மட்டுமே எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மற்றபடி, கட்சியின் பொதுச்செயலாளருக்குத் தான் “விப்” எனப்படும் கொறடாவை நியமிக்கும் அதிகாரமும், கட்சியின் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் அதிகாரமும் உள்ளது. தலைமைக்குக் கட்டுப்படாமல் எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
தற்போதைய சூழலில், எடப்பாடி பழனிசாமி கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக இருப்பதால், அவர் கொடுக்கும் கடிதமே சட்டப்படி வலுவானதாகக் கருதப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், எஸ்.பி. வேலுமணி தரப்பு தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறுவதால், சபாநாயகர் கட்சியின் விதிமுறைகளை மிகத் தீவிரமாக ஆய்வு செய்வார்.
எதிர்க்கட்சி வரிசையில் யார் முன்னால் அமரப்போகிறார்கள், அதிமுகவின் குரலாக யார் ஒலிக்கப்போகிறார்கள் என்பதைச் சபாநாயகரின் இந்த ஒரு முடிவுதான் தீர்மானிக்கப் போகிறது. அடுத்த சில மணிநேரங்களில் அதிமுகவின் எதிர்காலம் குறித்த இந்த விறுவிறுப்பான திருப்பம் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
