3 வருடத்தில் நடக்கும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கியமான விஷயம்!!

தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச விளையாட்டு அரங்கத்தை அமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளில் கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் சர்வதேச தரத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்துவதற்கே போதிய வசதிகள் இல்லை என்றார்.

இந்தக் குறையை சரிசெய்யும் நோக்கில், உலகத் தரம் வாய்ந்த புதிய சர்வதேச விளையாட்டு அரங்கத்தை அமைக்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். திட்டத்திற்குத் தேவையான மூலதனச் செலவுகள் குறித்து கவலைப்படாமல் உடனடியாக பணிகளைத் தொடங்குமாறு முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் கூறினார்.

இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், இது வெறும் அறிவிப்பாக இல்லாமல், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார். தமிழ்நாட்டை சர்வதேச விளையாட்டுகளுக்கான முக்கிய மையமாக மாற்றுவதே அரசின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கோயம்புத்தூரில் ரூ.500 கோடி மதிப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்திற்காக ஒண்டிப்புதூரில் நிலம் அடையாளம் காணப்பட்டு, டிட்கோ மூலம் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சில பரிந்துரைகள் அடிப்படையில் திட்டம் தற்போது மறுஆய்வில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னை ஓஎம்ஆர் சாலையில் செம்மஞ்சேரியில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி, தாம்பரத்தில் 4,000 பேர் அமரக்கூடிய விளையாட்டு அரங்கம் மற்றும் 20,000 இருக்கைகள் கொண்ட வேலம்மாள் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Related News

Latest News