ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி, ரூ.41 ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது 4.3 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 8.2 சதவிகிதம் இதர சத்துகள் கொண்ட ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.35 கொள்முதல் விலையாகவும், ரூ.3 அரசு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.38 கிடைத்து வந்த நிலையில், தற்போது கொள்முதல் விலை ரூ.1 உயர்த்தப்படுவதுடன், அரசு ஊக்கத்தொகையும் ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் மொத்த கொள்முதல் விலை ரூ.41 ஆக அதிகரிக்கிறது. இதற்காக அரசுக்கு மாதம் ரூ.30 கோடியும், ஆண்டுக்கு ரூ.360 கோடியும் கூடுதல் செலவாகும்.
தனியார் நிறுவனங்கள் பசும்பாலுக்கு ரூ.42 முதல் ரூ.45 வரையும், எருமைப் பாலுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரையும் வழங்குவதால், உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆவின் தினசரி பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டரிலிருந்து 30 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதனை 39 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொள்முதல் விலை உயர்வால் ஆவின் பாலின் சில்லறை விலையும் உயருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.44-க்கும், டோன்ட் பால் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
